இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது. தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பல் மருத்துவப் படிப்புகளுக்கான 2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

’’தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கல்லூரிகளில் கல்விக் கட்டணம் தவிர விடுதிக் கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

Continues below advertisement

முன்கூட்டியே தொடங்கும் விண்ணப்பப் பதிவு

கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எனினும் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து, மாணவர்களின் மேல்நிலைப் பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

நடப்பு ஆண்டில், நாளை (ஜூன் 6ஆம் தேதி) முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்ப்பிதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். அந்த கால அவகாசம் 5 நாட்கள் வரை இருக்கும்.

மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கவே..

விண்ணப்பத்துக்கான கால அவகாசம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் வெகுவாக குறையும். மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற சந்தேகம்கொள்ள தேவையில்லை. உரிய வகையில் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்படும்’’. 

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்த விவரங்கள் பின்னர் https://tnhealth.tn.gov.in/ மற்றும் https://tnmedicalselection.net/ ஆகிய இணையதள முகவரிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.