மருத்துவ மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவை மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. 


தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி, 21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 13 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் என 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 71 மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 11475 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 2150 இடங்களும் உள்ளன.


எவ்வளவு இடங்கள்?


அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6326 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 1768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. 7.5 சதவீதத்திற்கான உள் ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் 473 எம்பிபிஎஸ் இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 133 இடங்களும் உள்ளன. மொத்தமாக நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர்.


இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். இதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர். 


இதற்கிடையே மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பித்தோரின் தரவரிசைப் பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியானது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேர் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2,993 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஜூலை 25 தொடங்கியது.


40,200 விண்ணப்பங்கள்


இந்த ஆண்டு, மொத்தம் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. 


செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள்


தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று நிலையில் முதல்கட்டக் கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முடிவடைந்தது. மாணவர்கள் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கட்டக் கலந்தய்வுக்குப் பிறகு, செப்டம்பர் 1ஆம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளன.


இந்த நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு செப்டம்பர் 1ஆம் தேதியில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகக் கலந்தாய்வை நிறைவு செய்ய வேண்டும். கலந்தாய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை தினங்களை வேலை நாட்களாகக் கருதி பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/Public%20Notice%20dated%202872023.pdf