TN Knowledge City: தமிழ்நாடு அரசின் அறிவு நகர் திட்டத்தின் மூலம், வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் கிளைகள் திருவள்ளூரில் தொடங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசின் அறிவு நகரம்:

மாநிலத்தின் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அறிவு நகரம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில், பெரியபாளையத்தை ஒட்டி சுமார் 870 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஆய்வகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகள் என கல்வி மேம்பாட்டிற்கான ஏராளமான உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதகா தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசின் அறிவு நகர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாஸ்டர் பிளான் விவரங்கள் வெளியாகியுள்ளது.

அறிவு நகரம்: மாஸ்டர் பிளான் விவரங்கள்

பெரியபாளையத்தை ஒட்டியுள்ள தச்சூர் - சித்தூர் விரைவுச்சாலையில் அமையும் அறிவு நகரத்திற்கான, முதற்கட்ட பணிகள் தொடர்பான மாஸ்டர் பிளான் விவரங்கள் தான் சுவாரஸ்யமான விவரங்களுடன் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தமாக 870 ஏக்கரில் 3 கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளன. அதில் முதற்கட்டமாக 414 ஏக்கரில் சிப்காட் அமைப்பால் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அறிவு நகரம் அமைக்கப்படுவதாக ஏற்கனவே கர்நாடகா மற்றும் தெலங்கானா அரசுகள் அறிவித்து இருந்தாலும், அதனை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு மட்டுமே ஆகும்.

உட்கட்டமைப்பு வசதிகள்:

முதற்கட்ட பணியில் 12.56 ஏக்கர் நிலமானது அறிவு கோபுரம் (Knowledge Tower) எனப்படும் கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், கன்வென்ஷன் செண்டர், நீர் நிலைகள், நூலகம், நீர் நிலைய முனைகள் (Water Fronts) மற்றும் திறந்தவெளி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக தனி மண்டலங்கள், சமூக பூங்காக்கள், ஏரிய பார்த்தபடி அமையும் பல்கலைக்கழகங்கள், பொதுப் பூங்கா, மழைக்கால பூங்கா, வரவேற்பறைகள், விளையாட்டு, தங்கும் விடுதிகள் மற்றும் நிலையங்கள் இடம்பெற உள்ளன. 

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்:

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல டைம்ஸ் உயர் கல்வி (Times Higher Education) என்ற இங்கிலாந்து இதழியல் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு டிட்கோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தலைசிரந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் எதிர்காலத்தில் அவற்றின் கிளைகளை தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த யூனிவெர்சிட்டி ஆஃப் வெஸ்டெர்ன் என்ற பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது முதல் கிளையை தமிழ்நாடு அரசின் அறிவு நகரத்தில் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எளிய அணுகல் வசதி:

நாலாபுறமும் போக்குவரத்து இணைப்பு வசதிகள் இருப்பதால், அறிவு நகரத்தை அடைவது மிகவும் எளிதாக இருக்கும். உதாரணமாக கோயம்பேடு, ஊத்துக்கோட்டை, ஆவடி, மறைமலைநகர், புதியதாக அமைய உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் என தரைவழி இணைப்பு மிகவும் எளிதாக உள்ளது. இதுபோக கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் மார்க்கமாக ரயில் போக்குவரத்தும் உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பரந்தூரில் புதியதாக அமைய உள்ள விமான நிலையமும், அறிவு நகரத்திற்கான அணுகலை மேலும் எளிதாக்கியுள்ளது. அறிவுநகரத்தை ஒட்டி, அங்கு சாலை விரிவாக்க மற்றும் மேம்பாட்டு பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளன. இதன் மூலம், தமிழ்நாட்டின் கல்வித் தரம் மேம்படுவதோடு, பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகள் பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்குள்ள நிலங்களின் மதிப்பும் தாறுமாறாக உயரும் என கூறப்படுகிறது.