இந்திய அளவில் தமிழ்நாடு, பள்ளி மற்றும் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், இந்திய அளவில் சாதித்து வருவதும் கவனத்தை பெற்று வருகிறது. தொடர்ந்து நான் முதல்வன் திட்ட மூலம், பல்வேறு சாதனைகளை மாணவர்கள் படைப்பதாக, தமிழக அரசு தெரிவித்து வருகிறது. 

நான் முதல்வன் திட்டம்

அதேபோன்று அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வருகின்றனர். "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல்கள், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

இந்தாண்டு கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவர்கள் பெற்ற வெற்றிகள், இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக அரசின் உண்டு உறைவிடப் பள்ளிகள், மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள், மத்திய அரசின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் படிக்க தேர்வாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாணவர் சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசினர் மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மணிசர்மா என்ற மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தனது பள்ளியிலேயே வழங்கப்பட்ட ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்துள்ளார். 

ஜே.இ.இ தேர்வு எழுதிய அவர், 95 விழுக்காடு மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 698 வது இடத்தில் பெற்று தேர்ச்சி பெற்றார். தமிழகத்திலேயே அரசு பள்ளியில் பயின்ற மாணவன், தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இந்திய அளவில் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான, சென்னை ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் (Naval Architecture and Ocean Engineering) படிப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாணவனை நேரில் வரவைத்து மாணவனை சால்வை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்து தெரிவித்தார், மேலும் படிப்பிற்காக எந்த உதவியையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

மாணவர் கூறுவது என்ன ?

இதுகுறித்த மாணவர் மணிசர்மா கூறுகையில், தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்று மாணவன் ஐஐடி கல்லூரியில் தேர்ச்சி பெற்றதை வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சந்திக்க வந்த மாணவன் பெற்றோருடன் வருகை தந்து பெருமிதம் அடைவதாக தெரிவித்தார். தான் வெற்றி பெற்றதற்கு நான் முதல்வன் திட்டம் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.

ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் கிராப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே பார்க்கப்பட்டது. ஆனால், முறையான பயிற்சியும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால், எதையும் எட்டிப்பிடிக்கலாம் என்பதற்கு இந்த மாணவர்கள் முன்னுதாரணமாக மாறியுள்ளனர். தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டமும் இதில் முக்கிய பங்காற்றி இருப்பது கவனிக்கத்தக்கது.