தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகி உள்ளன. 11ஆம் வகுப்பில் சேர்வதற்கும் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் இணைவதற்கும் மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவும் நடைபெற்று வருகிறது. ஐடிஐ, டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கி விட்டது.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரியில் சேரும் மாணவர்களும் அவர்களுக்கு வழிகாட்டும் பெற்றோர்களும் குறிப்பிட்ட ஆவணங்களைக் கட்டாயம் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன? பார்க்கலாம்.
* எங்கு, எந்தப் படிப்பில் சேர வேண்டுமென்றாலும் புகைப்படம் (Photos) முக்கியம். சமீபத்தில் எடுக்கப்பட்ட, வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொள்ளவும். 10 புகைப்படங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டாம்ப் அளவு புகைப்படங்கள் 2 எடுத்து வைத்துக்கொள்ளலாம். மறக்காமல் டிஜிட்டல் முறையிலும் புகைப்படத்தை சேமித்து வைக்க வேண்டும்.
* அடுத்ததாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக் கணக்கு (Bank Account) தொடங்கி வைத்துக்கொள்வது முக்கியம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள், தாய்/ தந்தையைக் காப்பாளராகக் கொண்டு ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கலாம்.
* ஏற்கெனவே பிறப்பு சான்றிதழ் (Birth Certificate), சாதிச் சான்றிதழ் (Community Certificate) வாங்கி வைத்திருப்பீர்கள். அவற்றை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இன்னும் வாங்காத பட்சத்தில், பிறப்பு சான்றிதழை, ஊராட்சி அலுவலகம், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
* அடுத்த முக்கியமான சான்றிதழ், வருமானச் சான்றிதழ் (Income Certificate) ஆகும். கல்வி உதவித்தொகைகளைப் பெற விண்ணப்பிப்பதற்கும், வருவாய்வழித் தேர்வுகளுக்கும் வருமானச் சான்றிதழ் கட்டாயம். எனினும் ஆண்டுதோறும் இந்த சான்றிதழைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டியது முக்கியம்.
* உங்கள் குடும்பத்தில் நீங்கள்தான் முதலில் உயர் கல்வியைப் படிக்கும் நபராக இருந்தால் அதற்கான, முதல் தலைமுறை பட்டதாரி (First Generation Graduate Certificate) சான்றிதழைப் பெற்று வைத்திருப்பது முக்கியம். இது கல்லூரிக் கட்டணத்தில் சலுகையை அளிக்கும்.
* பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட சில படிப்புகளுக்கு இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate) கேட்பார்கள். அதாவது நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா என்பதற்கான சான்றிதழே இருப்பிடச் சான்றிதழ் ஆகும். இதை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம்.
* இ – சேவை மையங்கள் மூலம் எல்லா சான்றிதழ்களையும் விண்ணப்பித்துப் பெறலாம். சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவத்திலும் சேமித்து வைத்துக்கொள்வது முக்கியம்.
* தமிழ் வழிக் கல்வியில் பள்ளிக் கல்வியை முடித்தவர்களுக்கு, அரசு சார்பில் வேலைவாய்ப்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் சூழலில், அதற்கான Person Studied in Tamil Medium (PSTM) சான்றிதழைப் பெற்று வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
* சான்றிதழ்களோடு, புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றையும் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* மதிப்பெண் சான்றிதழ்களை 10 பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
பெயர் உள்ளிட்ட தகவல்கள் ஒப்பீடு
* இவை தவிர்த்து, மாணவர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் ஒரேபோல இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளவும். அதேபோல பிறந்த தேதி, தந்தை/ தாய் பெயர், முகவரி சரியாக இருக்கிறதா என்றும் ஒப்பிட்டுப் பார்க்கவும். இல்லையெனில் பெயர் திருத்தத்துக்கு சம்பந்தப்பட்ட அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.