நீட் தேர்வில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கவும், தேர்வர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் 2026 முதுகலை நீட் தேர்வில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வர தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வும், முறைகேடுகளும்
இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வானது நடைபெறுகிறது. இத்தகைய நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறி வருகிறது. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்ட முறைகேடு தொடங்கி மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கி தற்கொலை வரை துயரமான முடிவை எடுக்க துண்டுகிறது என நீட் தேர்வு மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் கடந்த 2026 மே 3ம் தேதி இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்தது. இதனால் தேர்வு எழுதிய முதலில் தேர்வு எழுதிய 22,05,035 பேர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஒன்றரை மாத கால இடைவெளிக்குப் பின் ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. இதற்கான விண்ணப்ப செலவுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனால் இந்த தேர்வை 19,99,895 பேர் எழுதினர். கிட்டதட்ட 2 லட்சம் மாணவர்கள் மறுதேர்வை எழுத வரவில்லை.
எழுச்சியை உண்டாக்கிய போராட்டம்
இதனிடையே நீட் முறைகேட்டை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்த, இது இந்தியா முழுவதும் விரிவடைந்தது. மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் வந்ததால் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
முதுகலை நீட் தேர்வில் மாற்றம்
இப்படியான நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதி முதுகலை நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை நியாயமானதாகவும், பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தேர்வர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசு பல புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி மாணவர்கள் இனி தங்கள் வீட்டிற்கு அருகில் தேர்வு மையத்தைக் கண்டறியவும், தேர்வு நடைபெறும் நகரம் குறித்த முன்கூட்டிய தகவல்களைப் பெறவும், ஒவ்வொரு கேள்விக்கும் கூடுதல் நேரம் ஒதுக்கவும் முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
என்னென்ன மாற்றங்கள்?
இந்த ஆண்டு நீட் முதுகலை தேர்வுக்கு மொத்தம் 2,73,183 தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட 12.5 சதவீதம் அதிகமாகும். முந்தைய நடைமுறையில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. இனி தேர்வர்கள் மூன்று விருப்பமான மாநிலங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தங்கள் மாநிலத்திற்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இதற்கு முன்னால் தேர்வுக்கு சில நாட்கள் முன்னர் தான் தேர்வு மையம், நகரம் பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றது. இனி 3 வாரங்களுக்கு முன்னரே அதனை அறிய முடியும். இதனால் முறைப்படி பயணத்தை திட்டமிட முடியும். முன்னதாக 200 வினாக்கள் இருந்த நிலையில் தற்போது அவை 180 வினாக்களாக குறைக்கப்பட்டு பதிலளிக்க கால அவகாசம் மாற்றமில்லாமல் 210 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக முதுகலை நீட் தேர்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது. இந்தாண்டு ஒரே அமர்வாக தேர்வு நடைபெறும். சுமார் 340 நகரங்களில் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. அதேபோல விண்ணப்பிப்பது முதல் தேர்வு நாள் வரை ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் கைரேகை மூலம் அடையாளம் காண இயலாத பட்சத்தில், கருவிழி பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
