Just In





Hindi Imposition: இந்தியைத் திணிக்கவில்லை; மராத்திதான் கட்டாயம்- டிவிஸ்ட் அடித்த மகாராஷ்டிர முதல்வர்
எதிர்க் கட்சிகளான சிவ சேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இந்தியைத் திணிக்கவில்லை என்றும் மாநிலத்தில் மராத்தி மொழிதான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது எனவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறி உள்ளார்.
மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் என்று அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மும்மொழிக் கொள்கை அமல்
ஏற்கெனவே மாநிலத்தில் ஆங்கிலம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகள் கட்டாயமாக உள்ளன. அதே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் மராத்தி மீடிய பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே அமலில் உள்ளன. இதனால் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப் படுவதாகத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், எதிர்க் கட்சிகளான சிவ சேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை அரசின் முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. எனினும் இந்தத் தகவலை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மறுத்துள்ளார்.
இந்தி கட்டாயம் ஆக்கப்படவில்லை
இதுகுறித்துப் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்தியைத் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுவது தவறு. மராத்திக்குப் பதிலாக இந்தி கட்டாயம் ஆக்கப்படவில்லை. மராத்தி படிப்பதுதான் கட்டாயம்.
மூன்றாவது மொழியாக இந்தி, தமிழ், மலையாளம் அல்லது குஜராத்தியைக் கற்பிக்கலாம். இந்தி மொழிக்கு மட்டுமே போதிய ஆசிரியர்கள் உள்ளன. பிற இந்திய மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை'' என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மோகன் பாகவத் தலையிட வேண்டும்
இதற்கிடையே, ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, இந்தித் திணிப்பு முடிவை திரும்பப் பெறுவதை உறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியது. பாகவத்துக்கு எழுதிய கடிதத்தில், மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே, இந்தித் திணிப்பு இந்துக்களை பிளவுபடுத்தும் என்றும், நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.