மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 56ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்க உள்ள நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கலந்துகொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தால், உயர் கல்வித்துறையின் அமைச்சராக கோவி செழியன் நியமிக்கப்பட்டார். அவர் உயர் கல்வித்துறை பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று கூறி இருந்தார்.
மீண்டும் தொடரும் மோதல் போக்கு
இதற்கிடையே தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் தலைமையில் இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது திராவிட நல் திருநாடு வரி விடுபட்டிருந்தது. இதுதொடர்பான பிரச்சினையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று (அக்.21) நடைபெற்றது. இதில் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 6,940 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு படிப்புகளில் முதலிடம் பிடித்த 106 மாணவர்களுக்கு, தங்க பதக்கங்களை வழங்கினார்.
புறக்கணித்த அமைச்சர் செழியன்
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் பங்கேற்பார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கோவி. செழியன் கலந்துகொள்வரா என்று கேள்வி எழுந்துள்ளது.