இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். செம்மொழியான தமிழ் மொழி என்ற தலைப்பில், தமிழுக்கு அவர் ஆற்றிய சேவைகள், பங்களிப்புகள் குறித்தவை இந்தப் பாடத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழியே பாடல் மட்டும் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது முதல்முறையாக அவர் குறித்த பாடம் இடம் பெற உள்ளது.


இந்த நிலையில், புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள பாடத்தில், ’’கலைஞரின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஐயுதங்கள். இயல் எழுதி, இசை எழுதி, நாடகம் எழுதி முத்தமிழுக்கும் தம் பங்கினை முழுமையாக அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்! இரண்டு லட்சம் பக்கங்களுக்கும் அதிகமான எழுத்து கலைஞருடையது. அன்பென்ற மை ஊற்றி அருந்தமிழ் கடிதங்கள் எழுதியவர்.


எதிர்வரும் எந்தக் கேள்விக்கும் சளைக்காது வந்து விழும் சுவையான பதில்களாலும் கேட்போரைக் கட்டிப்போடும் அருவிப் பேச்சாலும் தமிழர் மனங்களைக் கொள்ளை கொண்டவர். 


முத்தாரம், முரசொலி, வெள்ளி வீதி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்; "பொறுத்தது போதும் பொங்கி எழு" என்பன போன்ற தீந்தமிழ் வசனங்களால் திரை உலகிற்குத் திசைகாட்டியவர். 


பேரறிஞர் அண்ணா இறந்தபோது,


உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்த்தோமே


கண்ணெய்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?


எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்


இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?


என்ற வரிகளால் கேட்போரை இதயமுருகச் செய்தவரும் அவர்தான்! கரும்பினும் இனிய கவிதைகள் பற்பல படைத்தவரும் அவர்தான்!


தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம், திருக்குறள் உரை, சிலப்பதிகார நாடகம், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் என 178க்கும் மேற்பட்ட படைப்புகளைக் செந்தமிழுக்குச் சுவையாய் ஆக்கித் தந்திருக்கிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க வழிகாட்டியுள்ளார். தொல்காப்பியம், பதினெண் மேல்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு, இரட்டைக் காப்பியம், முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகிய 41 செவ்வியல் இலக்கியங்களை ஆய்வு செய்தல், மொழிபெயர்த்தல், பதிப்பித்தல் போன்ற பணிகளை வரையறுத்து செம்மொழி உயராய்வு மையத்திற்கு உயிரூட்டினார். 2010இல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, இமயக் கொடுமுடி முதல் குமரித் தாய்மடி வரை செம்மொழியான தமிழ்மொழியாம் எனச் செம்மாந்து ஒலிக்கச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.


வாழிய செம்மொழித் தமிழ்! வாழிய தமிழ்நாடு’’


என்று அந்த பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.