வெளியான செம அறிவிப்பு; பிறப்பு முதல் கல்லூரி வரை அரசே ரூ.1 லட்சம் நிதியுதவி- லட்சாதிபதி மகள் திட்டம்!
Lakhpati Bitiya Yojana Scheme: ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் பிறப்பு முதல் பட்டப் படிப்பு வரை அரசே ரூ.1 லட்சம் நிதியுதவி. லட்சாதிபதி மகள் திட்டம் தெரியுமா? கீழே காணலாம்.

டெல்லி அரசு பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால நலனுக்காக ஒரு மிகச்சிறந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஏற்கனவே அமலில் இருந்த லாட்லி திட்டத்தை முழுமையாக மாற்றி அமைத்து, லட்சாதிபதி பித்யா யோஜனா (Lakhpati Bitiya Yojana) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
எதற்காக இந்தத் திட்டம்? எவ்வளவு தொகை?
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், நிதியுதவி இல்லாத காரணத்தால் எந்தவொரு பெண் குழந்தையும் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்குப் பிறப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.56,000 வரை அரசின் சார்பில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்படும். இத்தொகை வட்டியுடன் சேர்ந்து முதிர்வு காலத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாகப் பயனாளியின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேரும்.
நிதி வழங்கப்படும் முறை
பெண் குழந்தைகளுடைய கல்வியின் ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் நிதி உதவி வழங்கப்படும்:
- குழந்தை பிறக்கும்போது: ரூ.11,000
- 1-ம் வகுப்பில் சேரும்போது: ரூ.5,000
- 6-ம் வகுப்பில் சேரும்போது: ரூ.5,000
- 9-ம் வகுப்பில் சேரும்போது: ரூ.5,000
- 10-ம் வகுப்பு தேர்ச்சியின் போது: ரூ.5,000
- 12-ம் வகுப்பில் சேரும்போது: ரூ.5,000
- கல்லூரி அல்லது டிப்ளமோ படிப்பின்போது: ரூ.20,000

இத்தொகையை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது நிரம்பிய பிறகோ, அல்லது பட்டப்படிப்பை முடித்து 21 வயது நிரம்பிய பிறகோ வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை 21 வயதுக்குள் 12-ம் வகுப்பை முடிக்கவில்லை என்றால், பணம் அரசுக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- பெண் குழந்தை டெல்லியில் பிறந்திருக்க வேண்டும்.
- குடும்பம் குறைந்தது 3 ஆண்டுகள் டெல்லியில் வசித்திருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
- தடுப்பூசி போடுவது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படிப்பது கட்டாயம்.
- 18 வயதுக்கு முன் திருமணம் செய்தால் பயன் கிடைக்காது.
விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வருகிறது. விண்ணப்பம் முதல் பணம் பட்டுவாடா வரை அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்பதால், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் ரேகா உறுதி அளித்துள்ளார். இந்தத் திட்டத்துக்காக முதல் கட்டமாக ரூ.160 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
























