கேரளாவில் அடுத்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 25 சதவீதத்தைக் குறைக்க மாநில அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

Continues below advertisement

கல்வியின் தரம் பாதிக்கப்படுமா என்பது குறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ள கேரள பொதுக்கல்வி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன் குட்டி, ''இந்த நடவடிக்கையால் கல்வியின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது'' என்று உறுதியளித்துள்ளார்.

அதிகரிக்கும் கல்விச் சுமை

கேரளாவில் பள்ளி மாணவர்களின் கல்விச் சுமை அதிகமாக இருப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், கடினமான பாடத் திட்டங்களால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், பாடங்களைப் படித்து முடிப்பதில் சிரமம் இருப்பதாகவும் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்து வந்தனர். இக்கோரிக்கைகளைத் தீவிரமாகப் பரிசீலித்த கேரள அரசு, மாணவர்களின் நலன் கருதி இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

Continues below advertisement

இது குறித்து அமைச்சர் சிவன் குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலைக் கலைத்திட்டக் குழு (Curriculum Committee) ஏற்கனவே வழங்கிவிட்டது.

கல்வித் தரம் குறையாது

பாடத்திட்டம் குறைப்படுவதால் கல்வித் தரம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் சிலரிடம் உள்ளது. ஆனால், கல்வியாளர்கள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவின் விரிவான ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் செய்யப்படுகிறது. புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் நீக்குவது இதன் நோக்கமல்ல.

மாறாக, திரும்பத் திரும்ப வரும் பகுதிகள் மற்றும் அந்தந்த வயதுக்கு மீறிய கடினமான பகுதிகளை மட்டுமே நீக்கத் திட்டமிட்டுள்ளோம். முக்கியமான மற்றும் அடிப்படையான பாடப்பகுதிகள் (Core Portions) அப்படியே இருக்கும்" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

வயதுக்கேற்ற கல்வி

மேலும், பிற பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்யும்போதும் இதேபோன்ற அறிவியல் பூர்வமான அணுகுமுறையே கடைப்பிடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். "தேர்வு தொடர்பான மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதே அரசின் மிக முக்கிய கொள்கை. மாணவர்களுக்குத் தேவையான, வயதுக்கேற்ற கல்வியை வழங்குவதே எங்களின் நோக்கம்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.