நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் யூகேஜி வகுப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த பட்டியலை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் ஜூலை 18ஆம் தேதி இரவு 7 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக மத்திய அரசு சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. ஒற்றை பெண் குழந்தைகளைக் கொண்டோருக்கும் இதில் சிறப்பு இடம் ஒதுக்கப்படுகிறது. 


14.35 லட்சம் மாணவர்கள்


இந்தியா முழுவதும் மொத்தம் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாட்டில் 3 பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 


முன்னதாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே கே.வி., பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பிறகு மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. இதற்கிடையில், 2020 புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 5 ஆக இருந்த குறைந்தபட்ச வயது, 6 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி 1ஆம் வகுப்பில் சேர மார்ச் 31ஆம் தேதி அன்று 6 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். 




பாலவாடிகா 3 சேர்க்கை அறிவிப்பு


இந்த நிலையில், பாலவாடிகா 3  எனப்படும் யூகேஜி வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதன்படி, மாணவர்கள் யூகேஜி வகுப்பில் சேர 5 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அதே நேரத்தில் 6 வயது முடிந்திருக்கக் கூடாது. இதில் சேர ஒற்றைப் பெண் குழந்தை ஒதுக்கீடு கிடையாது. பெற்றோர்கள் ஜூலை 18ஆம் தேதி இரவு 7 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


தேர்வு செய்யப்பட்ட மற்றும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் ஜூலை 20ஆம் தேதி அன்று வெளியிடப்படும். தகுதியான, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை ஜூலை 21 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும். இவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 29ஆம் தேதி தொடங்கும். 


யூகேஜி குழந்தைகளுக்குச் சீருடை எதுவுமில்லை. தினந்தோறும் 3 மணி நேரம் என வாரத்துக்கு 5 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். 


விண்ணப்பிப்பது குறித்து முழுமையான வழிமுறைகளை அறிந்துகொள்ள https://kvsonlineadmission.kvs.gov.in/instructions.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


அதேபோல https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_03_07_2023.pdf என்ற முகவரியைச் சொடுக்கி, யூகேஜி சேர்க்கை, ஆசிரியர்கள், பள்ளி குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.