கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.


கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 192 பள்ளிகளைச் சார்ந்த 6080 மாணவர்கள், 5971 மாணவிகள் ஆக மொத்தம் 12051 பேர் கலந்து கொண்டனர். இன்று (20.06.2022) வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் படி 4640 மாணவர்கள், 5362 மாணவிகள் ஆக மொத்தம் 10002 பேர் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். மாவட்டத்தின் தேர்ச்சி 83% ஆகும்.


 




 


இவ்வாண்டு மாணவர்கள் 76.32% தேர்ச்சியும் மாணவிகள் 89.80% தேர்ச்சியும் அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகள் 75.81 தேர்ச்சி விழுக்காடும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 83.11 தேர்ச்சி விழுக்காடும், தனியார் பள்ளிகள் 96.97 தேர்ச்சி விழுக்காடும் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 110 மாற்றுத் திறனாளிகள் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுள் 87 பேர்களின் தேர்ச்சி விழுக்காடு 79.09 ஆகும். 


 


 




கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.


கரூர் மாவட்டத்தில் மேல்நிலை வகுப்பு இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் 112 பள்ளிகளைச் சார்ந்த 4834 மாணவர்கள், 5411 மாணவிகள் ஆக மொத்தம் 10245 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இன்று (20.06.2022) மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகளின் படி 4305 மாணவர்கள், 5158 மாணவிகள் ஆக மொத்தம் 9463 பேர் தேர்ச்சி. பெற்று 92.37% தேர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாண்டு மாணவர்கள் 89.06% தேர்ச்சியும், மாணவிகள் 95.32% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.


 




அரசுப் பள்ளிகள் 86.54% தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 97.07% தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.75% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 27 மாற்றுத் திறனாளிகள் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுள் 25 பேர் தேர்ச்சி பெற்று 92.59% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கரூர் மாவட்டம் 27 வது இடம் பெற்றுள்ளது. 


 




தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்டார். எனினும் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் படி காலை 11 மணியளவில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளையும், மதியம் 1 மணி அளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் வெளியிடப்படும் என தகவல் தெரிவித்திருந்தனர். அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தினர். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மதியம் 12 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை 02:30 க்கும் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். கரூர் மாவட்ட நிர்வாகத்தின் காலதாமக தேர்வு முடிவுகள் வெளியானதற்கு, மாவட்ட பள்ளி கல்வித்துறை காரணமா அல்லது மாவட்ட நிர்வாகமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 




இந்நிலையில் தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் தெரிந்து கொள்ளலாம் என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் மதியம் வரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயேபள்ளிக்கு வருகை புரிந்தனர். மேலும், தங்கள் அலைபேசி வாயிலாகவே தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது மகன் மற்றும் மகள் அடுத்தகட்ட படிப்பு சம்பந்தமாக அருகில் உள்ள பல்வேறு கல்லூரிக்கு காலை முதலே படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.


இதனால் கரூர் சுற்றியுள்ள பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கூட்டம் அலை மோதின. மொத்தத்தில் கரூர் மாவட்டத்தில் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சதவீத அடிப்படையில் குறைந்து வந்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண