கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் உள்ள புவி அமைப்பியல் துறைத்தலைவர் தலைமையில், முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை கடந்த சில ஆண்டுகளாக பீல்டு ட்ரிப் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம் எனக்கூறப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டம், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுதும் இந்த மாணவர்கள் அவ்வப்போது அழைத்துச்செல்லப்பட்டு வருகின்றனர்.
அழைத்துச்செல்லப்படும் போது, முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை பயிலும் மாணவர்களிடம், ரூ.5ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூல் செய்து கொண்டு, அவற்றுக்கு முறையாக கணக்கு காட்டப்படுவதில்லை என்ற புகார் கடந்த சில மாதங்களாக எழுந்து வந்துள்ளது. மேலும், மாணவிகளை தலையில் கொட்டுவது, நேரம் கடந்தும் வகுப்புகளை நடத்துவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகாராக ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவர்களின் புகார் குறித்து துறைத்தலைவரிடம் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படத்துவங்கியது. இந்நிலையில், நேற்று 1 மணியளவில், புவி அமைப்பியல் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர், கரூர் அரசு கலைக்கல்லூரியில் புவி அமைப்பியல் துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி வளாகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, கமிட்டி விசாரணை முடிவு வரும் வரை காத்திருங்கள். இப்போது வகுப்புகளுக்கு செல்லுங்கள் என தெரிவித்தார்.
ஆனால், எவ்வளவு நாட்கள் தான் நாங்கள் இந்த பிரச்சினை குறித்து உங்களிடம் முறையிடுவது, இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து துறை பேராசிரியர்கள் மற்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
நேற்று முன்தினம் இதே கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கரூர் குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அந்தப் பேராசிரியருக்கு அதிரடி தீர்ப்பு வழங்கி திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றொரு துறை பேராசிரியர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.