கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் கொத்தப்பாளையம் கிராமத்தில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பார்வையிட்டார். பின்னர், இதுகுறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளதால் அவர்களை கல்வியில் மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


 




அதேபோல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக வானவில் மன்றங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வழிகாட்டப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு உள்ளது.


 


 




அத்துடன் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்து உள்ளார்கள். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு இது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு தேவையான புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.


 


 




அதன்படி, கரூர் மாவட்டத்தில் 2022-2023 நிதியாண்டில் கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5, தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் 2, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 2, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 01, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 03, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 11, கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 01, தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 02 என மொத்தம் 27 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.10.1919 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டுள்ளது. அதேபோல் 2023 - 2024 நடப்பு நிதியாண்டில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 01, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 02, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 04, கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 06 என மொத்தம் 13 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.4.264 மதிப்பீட்டில் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்து 50 சதவீத பணிகளுக்கு மேல் முடிவு பெற்று உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ் செல்வன், அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர்  ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.