அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கணித்தமிழ்24 பன்னாட்டு மாநாட்டில் ஹேக்கத்தான் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் பன்னாட்டுக் கணித்தமிழ்24 மாநாடு, வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8, 9, 10 ஆகிய நாள்களில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ‘தமிழிணையம்99’ மாநாட்டுக்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து, 2024-ல் கணித்தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.
எதற்காக இந்த மாநாடு?
- டிஜிட்டல் யுகத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டையும் புரிதலையும் மேம்படுத்தும் புதுமையான கருவிகள் உருவாக்குவதை ஊக்குவித்தல்.
- மொழியியல் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ் மொழியில் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துதல்.
- கல்வி, உள்ளடக்க உருவாக்கம், தகவல்தொடர்பு போன்ற தளங்களில் பரந்துபட்ட பயனர்கள் பயன்படுத்தும் விதமாகத் தமிழ் மொழியைக் கொண்டுவருவதற்கான தீர்வுகளை உருவாக்குதல்.
- செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியைச் செழுமையுடன் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்குதல். இதன் மூலம், மொழி தொடர்பான தொழில்நுட்ப சாத்தியங்களை விரிவாக்குதல்.
ஹேக்கத்தான் போட்டி
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணையக் கல்விக் கழகமானது StartupTN நிறுவனத்துடன் இணைந்து நிரலாக்கப் போட்டியை (Hackathon) நடத்துகிறது. இப்போட்டியின் வாயிலாக நவீனத் தொழில்நுட்பங்களான இயற்கை மொழி ஆய்வு, இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இதர டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியின் வளமையை வெளிக்கொணரவும், புதுமைகளைச் சிந்திக்கத் தூண்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் இணையக் கல்விக்கழகம்
‘தமிழிணையம்99’ மாநாட்டின் விளைவாக 2000-ஆவது ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் இணையக் கல்விக் கழகம். இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் முதன்மையான நோக்கங்கள் இணைய வழியில் தமிழ்க் கல்வியை வழங்குவதும், கணினித் தமிழை ஊக்குவிப்பதும், புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்வதும் ஆகும்.
வெற்றியாளர்களுக்குப் பரிசுகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் கணித்தமிழ்24 மாநாட்டில் செயல்விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கான பரிசுகள் மாநாட்டின்போது வழங்கப்படும். நிரலாக்கப் போட்டி முடிந்த பின், பயனுள்ள தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
உருவாக்கப்பட்ட மென்பொருட்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக www.tamilvu.org இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.kanitamil.in/#/hackathon