"அதிக மதிப்பெண் எடுத்தும் மேல்படிப்பிற்கு பணம் இல்லாததால், கூலி வேலை செய்யும் மகளின் வீடு தேடி சென்று ஊக்கத்தொகை வழங்கி படிப்பு செலவு ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் "
மாணவர்கள் எழுதுகின்ற முதல் பொது தேர்வு என்றால் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தான். எனவே மாணவர்களுக்கு மிக முக்கிய தேர்வாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இருந்து வருகின்றன. கடந்த மே மாதம் 16-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அந்தத் தேர்வு முடிவுகளில் காஞ்சிபுரம் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் சற்று அதிகரித்து இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 183 பள்ளிகளை சேர்ந்த மாணவ மற்றும் மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 15 ஆயிரத்து 198 மாணவர் மற்றும் மாணவிகள் தேர்வு எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 94.85 சதவீதமாக இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாநில அளவில் 16-வது இடத்தை பிடித்து சாதித்திருந்தது. இதுவே காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த ஆண்டு 32 - வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாதித்த மாணவ மாணவிகள்
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் பல ஏழை எளிய மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண் எடுத்து சாதித்திருந்தனர். அவர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் என பல தரப்பட்டவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
வறுமையிலும் சாதித்த மாணவி
அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கீழ்கேட் பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் காலனி பகுதியில், எலக்ட்ரீசியன் வேலை செய்யும் மகள் தர்ஷிகா பத்தாம் வகுப்பில் 475 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். அவரது தந்தை தினக்கூலி வேலை செய்து வரும் நிலையில், மாணவி எடுத்த மதிப்பெண்ணுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
மாணவியின் தந்தைக்கு போதிய வருமானம் இல்லாததால் மாணவி பதினொன்றாம் வகுப்பு தொடர முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது. மாணவி 12ஆம் வகுப்பு தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்து வருவதாக அறிந்த உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் உடனடியாக மாணவி வீட்டிற்கு சென்று மாணவியை பத்தாம் வகுப்பு மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்தினார்.
பள்ளி செலவை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர்
மேலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு சால்வை அணிவித்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மாணவிக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஊக்கத்தொகை வழங்கினார். படிப்பை தொடர முடியாமல் அவதிப்பட்டு வந்த மாணவியிடம், கவலைப்படாமல் படிக்க வேண்டும் 12 ஆம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற சாதிக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பதினொன்றாம் மற்றும் 12 ஆம் வகுப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு பள்ளி தொடர வாழ்த்து தெரிவித்து தெரிவித்தார். இதில் உடன் காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் எழிலரசன், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.