டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய பாடதிட்ட அறிமுகம் குறித்து அதன் துணைவேந்தர் ஜகதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இது “தேவையில்லாத சர்ச்சை” எனவும், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பரந்துபட்ட அறிவை இந்தப் பாடதிட்டம் அளிக்கும் எனவும் கூறியுள்ளார் ஜகதீஷ் குமார்.
‘Counter Terrorism, Asymmetric Conflicts and Strategies for Cooperation among Major Powers’ என்ற தலைப்பில் புதிய பாடம் ஒன்று ஜே.என்.யூ கல்வித் திட்டக் குழுவில் எந்த விவாதமும் அனுமதிக்கப்படாமல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் ‘ஜிஹாதி தீவிரவாதம் என்பது மத அடிப்படைவாத தீவிரவாதம் என்றும், சோவியத் யூனியனும் சீனாவும் அரசு பயங்கரவாதத்தின் மிகப்பெரிய கொடையாளர்கள் எனவும், அவ்விரு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளை வளர்ப்பதாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து ஜே.என்.யூ துணைவேந்தர் ஜகதீஷ் குமார், “கடந்த சில நாட்களாக, தேவையில்லாத சர்ச்சை ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாடத்தின் கல்வி ரீதியான அறிவைக் குறித்து யாரும் பேசவில்லை. இந்தப் பாடத்தின் நோக்கமே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பைத் தீவிரவாதத்திடம் இருந்து பாதுகாப்பதற்கும், அவ்வாறான சூழல்களில் எப்படி செயல்படுவது என்பதே” என்று கூறியுள்ளார்.
”இந்தியாவின் அண்டைநாடுகளுடனான உறவு இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆதலால் ஜே.என்.யூ போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் தீவிரவாத எதிர்ப்பு குறித்த சிந்தனையை வளர்க்க வேண்டியதாக இருக்கிறது. இந்தியாவில் மிக அவசரமாக இத்துறையில் தேர்ந்தவர்களின் தேவை இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளியானது முதல், மத மோதலைத் தூண்டுவதாக கடும் எதிர்ப்புகளைப் பெற்று வரும் இந்தப் பாடதிட்டத்தின் நோக்கம் என்பது உலக அளவிலான தீவிரவாதச் செயல்களை மனதில் கொண்டும், அதனைக் எதிர்கொண்ட இந்தியாவின் அனுபவங்களையும் வெளிக்கொண்டு வருவதாகவும் என்கிறார் ஜகதீஷ் குமார்.
”இந்தியாவின் கண்ணோட்டத்தை சரியாக மாற்ற வேண்டிய பணிகள் இருக்கின்றன. இந்தப் பாடதிட்டத்தின் மூலம், இந்தியாவின் கண்ணோட்டத்தை உருவாக்கலாம். உலகளாவிய, உள்நாட்டுத் தீவிரவாதக் குழுக்கள் குறித்து கற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் மத அடிப்படைவாதமும், வன்முறையும் உற்பத்தியாவது குறித்த அறிவை அதுபோன்ற எதிர்கால சிக்கல்களைச் சமாளிக்க உதவும்” என்று இந்தப் பாடதிட்டம் குறித்து கூறியுள்ளார் துணைவேந்தர் ஜகதீஷ் குமார்.
மேலும் ஜகதீஷ் குமார் இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இதுகுறித்த பிரச்னைகள் பற்றி விழிப்புணர்வு கொள்ள வேண்டும் எனவும், அதனை எதிர்கொள்ள வழிமுறைகளைத் தயார் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்தப் பாடதிட்டம் மத மோதலை உருவாக்குவதாகவும், வலதுசாரி கருத்துகளைத் திணிப்பதாகவும் ஜே.என்.யூ மாணவர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.