பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜன.24ஆம் தேதி தொடங்கின. குறிப்பாக தாள் 2ஏ மற்றும் தாள் 2பி ஆகியவற்றுக்கான தேர்வுகள் காலை 9 முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 முதல் 6 மணி வரையும் தேர்வுகள் நடைபெற்றன.


இதில் தாள் 2 ஏ தேர்வுகள், தாள் 2பி-ல், பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் தேர்வுகள் மதியம் 3 முதல் 6 மணி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகள் ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களில், 544 தேர்வு மையங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் நடைபெற்றன.


பாளையங்கோட்டையை மாணவர் முதலிடம்


தாள் 2ஏ தேர்வுகள் இரண்டு முறைகளில் 13 மொழிகளில் நடைபெற்றன. கணிதம் மற்றும் திறன் சார்ந்த தேர்வுகள் கணினி மூலமாகவும் ட்ராயிங் தேர்வுகள் பேனா- காகித முறையிலும் நடைபெற்றன. பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு நடத்தப்படும் முதல் தாளை, 11.70 லட்சம் மாணவர்கள் எழுதினர். பி.ஆர்க்  மற்றும் பி.பிளானிங் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட இரண்டாவது தாளை மொத்தம் 55,493 தேர்வர்கள் எழுதினர்.


இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அதேபோல ஓபிசி பிரிவில் முகுந்த் முதலிடம் பிடித்துள்ளார். எஸ்சி பிரிவில் ஆராதனா என்ற மாணவி, முதலிடம் பிடித்துள்ளார். இவர் 99.9906591 என்ற பர்சன்டைலைப் பெற்றுள்ளார்.


அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியல், மாநில அளவில், சமூக அளவில், பாலின அளவில் என பல்வேறு அளவீடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அவை குறித்து முழுமையாகக் காண: https://jeemain.nta.ac.in/images/Press-Release-for-the-Release-of-NTA-Scores-for-JEE(Main)-2024-Session-1-dated-12-Feb-2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.


11.7 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில், 70 ஆயிரத்து 48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் அகில இந்திய அளவில் 23 மாணவர்கள் 300-க்கு 300 மதிப்பெண்களைப் பெற்றனர். இந்த 23 பேரில், தமிழ்நாட்டில் இருந்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் ஒருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். 


மாணவர் முகுந்த் பிரதிஷ், பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தையும் அன்று இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.