ஜேஇஇ மெயின் இரண்டாம் அமர்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான் அவகாசம் உள்ளதாக, என்டிஏ தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு மையம், கட்டணம் குறித்த வழிமுறை குறித்து விளக்கமாகக் காணலாம்.

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. 

இந்தத் தேர்வுகள் ஆண்டுதோறும் இரு அமர்வுகளாக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது அமர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25 கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் அன்று இரவு 9 மணி வரை https://jeemain.nta.nic.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

JEE Main 2025 தேர்வு முறை

தாள் 1: ஐஐடி, என்ஐடி, CFTI மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற மாநில நிறுவனங்களில் பி.இ./  பி.டெக். மாணவர் சேர்க்கைக்கு இந்தத் தேர்வு முக்கியம். அதேபோல, IIT சேர்க்கைக்குத் தேவையான JEE Advanced-க்கான தகுதித் தேர்வாகவும் இது உள்ளது.

தாள் 2: பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் படிப்புக்கு 2  பிரிவுகளாக உள்ளன.

  • தாள் 2ஏ: பி.ஆர்க்.
  • தாள் 2பி: பி.பிளானிங்.

தேர்வு எப்படி நடக்கும்?

முதல் தாள்: கணினி வழியிலான தேர்வு

இரண்டாம் தாள் முதல் பிரிவு (Paper 2A): கணிதம், திறனறிவுத் தேர்வு கணினி வழியில் நடைபெறும். வரைதல் தேர்வு ஆஃப்லைனாக நடைபெறும்.

இரண்டாம் தாள் இரண்டாம் பிரிவு (Paper 2B): கணிதம், திறன் மற்றும் திட்டமிடல் சார்ந்த கேள்விகள் கணினி வழியில் நடைபெறும்.

எவ்வளவு இடங்கள்?

இந்தியாவில் உள்ள NIT-களில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 24,000 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. JEE முதன்மைத் தேர்வு ஆங்கிலம், தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
  • முகப்புப் பக்கத்தில் "New Registration" என்ற பக்கத்தை க்ளிக் செய்யவும்.
  • வேறு பக்கத்துக்கு கொண்டு செல்லப்படும்.
  • அதில், உங்களின் பெயர், மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரி ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
  • முன்பதிவு செய்தபிறகு, லாகின் விவரங்கள் தோன்றும்.
  • தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
  • புகைப்படம் மற்றும் கையெழுத்தைப் பதிவேற்றம் செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சப்மிட் பொத்தானை அழுத்தவும்.
  • வருங்காலத் தேவைக்காக படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/