2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் இன்று (மார்ச் 4) இரவு 10.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். 


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.


ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேரலாம். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றோர், புகழ்பெற்ற ஐஐடி கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். ஆண்டுதோறும் இந்தத் தேர்வு 2 முறை நடத்தப்படும் நிலையில், 2ஆம் அமர்வுக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. 


இன்றே கடைசி


ஜேஇஇ முதன்மைத் தேர்வு இரண்டாம் அமர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தேர்வர்கள் விண்ணப்பிக்க (மார்ச் 2ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்தது. தொடர்ந்து 2 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 4ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். விண்ணப்பக் கட்டணத்தையும் இன்று இரவு 11.50 மணிக்குள் செலுத்த வேண்டும். மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஜேஇஇ தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.


ஏற்கெனவே ஜேஇஇ முதன்மைத் தேர்வு முதலாம் அமர்வுக்கு விண்ணப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்திய தேர்வர்கள் பழைய விண்ணப்ப எண்ணையும் கடவுச் சொல்லையும் உள்ளிட்டு, உள்ளே செல்லலாம்.


தேர்வுத் தாள், தேர்வு மொழி, மாநில குறியீட்டு எண், தேர்வு மையங்கள், கல்வித் தகுதி விவரங்கள் ஆகிய தகவல்களைப் பதிவிட வேண்டும். மறக்காமல், தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.  


ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரு தேர்வர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பல முறைகள் விண்ணப்பித்தால், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


விண்ணப்பிப்பது எப்படி?


* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


* அதில் JEE Main 2024 registration என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். 


* அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, லாகின் செய்யவும். 


* அதில் விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு, தேவையான ஆவணங்களை உள்ளிட்டு பதிவேற்றம் செய்யவும். 


தேவையான ஆவணங்கள் என்னென்ன?



  • புகைப்படம் மற்றும் கையெழுத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி

  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த இணைய பேங்க்கிங் வசதி

  • 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்கள், அனுமதிச் சீட்டு நகலைக் காண்பிக்கலாம்)

  • சாதிச் சான்றிதழ்


கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.ac.in/images/public-notice-for-jee-main-session-2.pdf