பொறியியல் நுழைவுத் தேர்வான JEE தேர்வில் வெற்றி பெற்று, திருச்சி என்ஐடியில் படிக்கும் வாய்ப்பைப் பழங்குடியின மாணவி ரோஹினி பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சை மலை என்னும் மலைப் பகுதி உள்ளது. இங்கு தொலைத்தொடர்பு, இணையதள சேவை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது.
இதற்கிடையே பச்சை மலையை சேர்ந்த மலைவாழ் இன மாணவி ரோஹிணி. பச்சை மலை சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து அரசுப் பொதுத் தேர்வில் 423 மதிப்பெண்கள் எடுத்தார். அதன் பிறகு பொறியியல் படிப்பு படிப்பதற்காக JEE நுழைவு தேர்வு எழுதி, 73.8 சதவீதம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வேதியியல் பொறியியல் படிக்கும் வாய்ப்பு
இதையடுத்து ரோஹினி, திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ’’மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்து ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதினேன்.
அதில் 73.8 சதவீதம் தேர்ச்சி பெற்றதால் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. பொறியியல் படிப்பான பி.இ கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்து உள்ளேன். என் படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என தெரிவித்தார்.
என்ஐடி சாத்தியமானது எப்படி?
மேலும் பேசிய அவர், ’’பள்ளியில் படித்தபோது தேசிய தொழில்நுட்ப கழகத்தில் உள்ள கெமிக்கல் ஆய்வகத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர்.
அப்போது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்று கேட்டேன்.
பள்ளியில் 12ஆம் வகுப்புத் தேர்விலும் ஜே இஇ தேர்விலும் தேர்ச்சி பெற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், உறவினர்கள் ஊக்கப்படுத்தி உதவி செய்தனர்.
என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மேல் படிப்புக்கு உதவி செய்யும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என மாணவி ரோஹினி தெரிவித்தார்.