ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வு 2021 அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 


நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கோரமாகத் தாக்கியதால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜூ ந் 25 ஆம் தேதி, ஜூலை 5 ஆம் தேதி என்று இரண்டு முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கெனவே இரண்டு முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை ஐஐடி காரக்பூர் முன்னெடுத்து நடத்தவிருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐஐடி காரக்பூர் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. கூட்டு தேர்வுகள் துறை (Joint Examination Board, JAB 2021) இந்தத் தேர்வை மேற்பார்வை செய்கிறது.


இது தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர், "ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றி நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்மையான 25 ஐஐடிகள், 31 என்.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 


இதுதவிர, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வின் மதிப்பெண் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது (ஐஐஎஸ்இஆர்), இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஎஸ்டி), திருவனந்தபுரம், ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் டெக்னாலஜி (ஆர்ஜிஐபிடி), ரே பரேலி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் மற்றும் எனர்ஜி, விசாகப்பட்டினம் போன்றவற்றில் சேர்வதற்கும் பயன்படுகிறது. ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. இரண்டு தாள்களுக்கும் மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு வருபவர்கள் இரு தேர்வுகளையும் எதிர்கொள்வது கட்டாயமாகும்.  ஆண்டுக்கு இரண்டு முறைக்கு மேல் இந்தத் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கு, jeeadv.nic.in. என்ற இணையதளத்தை அணுகி தகவல்களைப் பெறலாம்.