வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்‌ போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து ஜாக்டோ ஜியோ கூறி உள்ளதாவது:


’’தமிழ்நாட்டு மக்கள்‌ தொகையில்‌ 5 சதவீத மக்கள்‌ தொகை உள்ள அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசுப் பணியாளர்கள்‌ உங்கள்‌ (முதல்வர் ஸ்டாலின்) மீது நம்பிக்கை வைத்து ஒட்டுமொத்தமாக தாங்கள்‌ அரியணை ஏற குடும்பத்தோடு வாக்களித்தனர்‌.


அவற்றையெல்லாம்‌ மறக்காதவரான தாங்கள்‌ அவ்வப்போது, ‘’நான்‌ கொடுத்த உறுதிமொழிகளை மறைக்கவும்‌ இல்லை, மறுக்கவும்‌ இல்லை தமிழகத்தின்‌ நிதிநிலை சரியாகும்‌ வரை கொஞ்காலம்‌ பொறுத்திருங்கள்‌' என்று கூறி வருகிறீர்கள்‌. தாங்கள் 2021ல்‌ பதவியேற்றபோது கொரோனா காலகட்டமாக இருந்ததாலும்‌ அதை சமாளிக்க போதிய நிநி, அரசு கஜானாவில்‌ இல்லை என்றதால்‌, உங்களின்‌ கருத்தை ஏற்றுக்கொண்டு, எங்கள்‌ கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்‌ என்று கேட்காமல்‌ அமைதியாகவே இருந்தோம்‌‌.


ஆண்டு ஒன்றானது, இரண்டானது தற்போது மூன்றாமாண்டு முடியும்‌ தறுவாயில்‌ எங்கள்‌ கோரிக்கைகளில்‌ ஒன்றின்பால்கூட தாங்கள்‌ உத்தரவிடாத நிலையில்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசுப் பணியாளர்கள்‌ கொந்தளிப்பான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்‌. எங்களின்‌ பொறுமைகள்‌ சுக்குநாறாகியுள்ளன.


தங்கள்‌ தலைமையிலான அரசும்‌ வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஏமாற்றுகிற சராசரி அரசாக இருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்களின்‌ எல்லா நியாயங்களையும்‌ புரிந்த, எங்களுக்காக எங்களுடன்‌ நின்று போராடிய நீங்களே எங்கள்‌ நியாயங்களை புரிந்துகொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானதாகும்‌.


உரிமைகள்‌ தரமறுக்கும்‌ இடங்களில்‌ போராட்டங்களை கையிலெடுப்பதைத்‌ தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்களும்‌ பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும்‌ தமிழ்நாடு முதல்வர்‌ எங்களை அழைத்துப்‌ பேசாததும்‌, கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும்‌ எங்களை வேலை நிறுத்தப்‌ போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.


இரண்டரை ஆண்டுகள்‌ நீண்ட காத்திருப்புக்குப்‌ பின்னர்‌ இனிமேலும்‌ பொறுமையோடு காத்திருப்பது அர்த்தமற்றது என உணர்ந்த நிலையில்‌ ஜாக்டோ ஜியோ கீழ்க்கண்ட ஜீவாதாரப்‌ போராட்டங்களை அறிவித்துள்ளது.


போராட்ட அட்டவணை



  1. 22.01.2024 முதல்‌ 24.01.2024 வரை மூன்று நாட்கள்‌ மாநிலம்‌ முழுவதும்‌ கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்‌, அரசு ஊழியர்‌ சந்திப்புப்‌ பிரச்சார இயக்கம்‌ நடத்துவது.

  2. 30.01.2024 அன்று மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மறியல்‌ போராட்டம்‌ நடத்துவது.

  3. 05.02.2024 முதல்‌ 09.02.2024 வரை அரசியல்‌ கட்சித்‌ தலைவர்களைச்‌ சந்தித்து ஆதரவு கோருவது (பி.ஜே.பி., அ.தி.மு.க. தவிர்த்து).

  4. 10.02.2024 அன்று மாவட்ட அளவில்‌ வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது.

  5. 15.02.2024 அன்று ஒரு நாள்‌ அடையாள வேலை நிறுத்தப்‌போராட்டம்‌ நடத்துவது.

  6. 26.02.2024 முதல்‌ காலவரையற்ற வேலை நிறுத்தப்‌ போராட்டம்‌ நடத்துவது


என்னென்ன கோரிக்கைகள்?


1.4.2003க்குப்‌ பிறகு அரசுப்பணியில்‌ சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்‌ பங்களிப்புடன்‌ கூடிய ஓய்வூதியத்‌ திட்டத்தினைக்‌ கைவிட்டு, பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்‌.


காலவரையின்ற முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்‌ கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்‌.


இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும்‌ மேல்நிலைப்பள்ளி தமைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம்‌ வழங்கப்படாமல்‌ இழைக்கப்பட்டு வரும்‌ அநீதி களையப்பட வேண்டும்‌.


முதுநிலை ஆசிரியர்கள்‌, அனைத்து ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌, அரசுப்‌ பணியாளர்கள்‌, கண்காணிப்பாளர்கள்‌, தலைமைச்‌ செயலகம்‌ உள்ளிட்ட அரசு அலுவலர்கள்‌, களப்பணியாளர்கள்‌, பல்வேறு துறைகளில்‌ உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள்‌, ஊர்தி ஓட்டுநர்கள்‌, ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக்‌ களைய வேண்டும்‌. கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு ஊக்க ஊதிய உயாவு உடனடியாக வழங்கிட வேண்டும்‌. உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியாகளாக உயர்த்த வேண்டும்‌.


சிறப்பு காலமுறை ஊதியம்‌ பெற்றுவரும்‌ சத்துணவு, அங்கன்வாடி வருவாய்‌ கிராம உதவியாளர்கள்‌, ஊராட்சி செயலாளர்கள்‌, ஊர்ப்புற நூலகர்கள்‌, கல்வித்துறையில்‌பணியாற்றும்‌ துப்புரவுப்‌ பணியாளர்கள்‌, தொகுப்பூதியத்தில்‌ பணியாற்றும்‌ செவிலியர்கள்‌, சிறப்பு ஆசிரியர்கள்‌, பல்நோக்கு மருத்துவமனைப்‌ பணியார்கள்‌ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம்‌ வழங்கிட வேண்டும்‌. மேலும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ பணியாளர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பகுதிநேர ஆசிரியர்கள்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்பட வேண்டும்‌.


அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்‌.


21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்‌ தொகை அரசு ஊழியர்கள்‌- ஆசிரியர்கள்‌- அரசுப்‌ பணியாளர்கள்‌ ஆகியோருக்கு மறுக்கப்‌பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்‌.


2002 முதல்‌ 2004 வரை தொகுப்பூதியத்தில்‌ நியமனம்‌ செய்யப்பட்ட ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ அரசுப்‌ பணியாளர்களின்‌ பணிக்‌ காலத்தினை அவர்கள்‌ பணியில்‌ சேர்ந்த நாள்‌ முதல்‌ பணிவரன்முறைப்‌ படுத்தி ஊதியம்‌ வழங்கிட வேண்டும்‌.


சாலைப்பணியாளர்களின்‌ 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்‌.


உள்ளாட்சி அமைப்புகளிலும்‌ பல்வேறு அரசுத்துறைகளிலும்‌ தனியார்‌ முகமை மூலம்‌ பணியாளர்களை நியமனம்‌ செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும்‌’’.


இவ்வாறு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.