மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் மாணவர்களைப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்வதற்கு தடைகோரி அண்மையில் ஒருங்கிணைந்த மாவட்ட சுயநிதி பள்ளிகள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு , மாற்றுச்சான்றிதழ் கோரும் மாணவர்களுக்கு ஒருவாரத்துக்குள் சான்றிதழை வழங்கவேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. 


தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற விரும்பும் பெற்றோர்கள் பிள்ளை ஏற்கெனவே படித்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் கொடுக்கப்பட்ட ஒருவாரத்துக்குள் தொடர்புடைய பள்ளி மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும். ’ஒருவேளை பள்ளிக்கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட சிக்கலில் பள்ளிக்கும் பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தால் அது சட்ட ரீதியாகத் தீர்த்துவைக்கப்பட வேண்டுமே ஒழிய மாற்று சான்றிதழ் வழங்குவதற்கு அது தடையாக இருக்கக் கூடாது’ என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார். 


மேலும், ஒருவேளை மாற்றுச்சான்றிதழைக் கொடுக்க பள்ளிகள் மறுக்கும் நிலையில் முதன்மை கல்வி அலுவலரிடம் பள்ளிகள் புகார் செய்யலாம். அவர் உடனடியாக இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் தரப்பட்டதா என்பது உறுதிசெய்யப்பட வேண்டும். ஒருவேளை சட்ட அத்துமீறல் எதுவும் இது தொடர்பாக நீதிமன்றத்தின் பார்வைக்கு வரும் நிலையில் அதன்மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இதுதொடர்பாக பள்ளிகளுக்கு இரண்டு வாரத்துக்குள் சுற்றறிக்கை விட வேண்டியும் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.


முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


கொரோனா ஊரடங்கால் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்ததை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீதம் கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம். வருமானம் பாதிக்கப்படாதவர்கள் 85 சதவீதத்தில் இருந்து முதல் தவணையை செலுத்த வேண்டும். மற்ற தவணைகளை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு RTE  சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை ஒதுக்க அரசு பரிசீலிக்கலாம். வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் 75 சதவீதம் செலுத்த வேண்டும்; மற்ற தவணைகளை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்’ என்று நீதிபதி கிருஷ்ண குமார் உத்தரவிட்டார்.மேலும், வருமானம் இல்லாதவர்கள் கட்டணக் குறைப்பு கேட்டு பள்ளியை நாடலாம் என்றும், கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக ஆன்லைன் கல்வி பெறுவது அல்லது பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தக்கூடாது என்றும், புகார் வந்தால் தீவிரமாக ஆராய்ந்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது, இதற்கு, கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நீக்கப்படமாட்டார்கள் என்று தனியார் பள்ளிகள் கூறியது. இதனைத் தொடர்ந்து, பள்ளி கட்டணம் தொடர்பான வழக்கை முடித்து நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்