2023- 24ஆம் ஆண்டில் பொதுத்தேர்வு எழுதும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் எனப்படும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளில்‌ மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள்‌ வழங்குதல்‌ தொடர்பான அறிவுரைகள்‌ மற்றும்‌ நெறிமுறைகள்‌ வழங்கப்படுகின்றன.


அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்‌ ஒதுக்கீடு (தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து)- மொத்தம்‌ 10 மதிப்பெண்கள்‌


மாணவர்கள்‌ வருகைப்‌பதிவு: அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌


வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்கள்‌ வகுப்பாசிரியரால்‌ கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும்‌.


கல்வியாண்டில்‌ ஆரம்ப நாள்‌ முதல்‌ மாணவர்கள்‌ பள்ளிக்கு வருகைபுரிந்த நாட்களின்‌ அடிப்படையில்‌, கீழ்க்கண்டவாறு வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்‌.


80 சதவீதத்திற்கு மேல்‌ வருகை 2 மதிப்பெண்கள்‌


75 சதவீதம்‌ முதல்‌ 80 சதவீதம்‌ வரை – 1 மதிப்பெண்‌


அதாவது, 80.01% முதல்‌ 100% வரை- 2 மதிப்பெண்கள்‌


75% முதல்‌ 80% வரை- 1 மதிப்பெண்‌


வருகைப்‌ பதிவிற்கான மதிப்பெண்கள்‌ அனைத்துப்‌ பாடங்களுக்கும்‌பொதுவானது.


உள்நிலைத்‌ தேர்வுகள்‌ : அதிகபட்சம்‌ 4 மதிப்பெண்கள்‌


(சிறந்த ஏதேனும்‌ மூன்று தேர்வுகளின்‌ சராசரி மதிப்பெண்ணை 4 மதிப்பெண்களுக்குக்‌ கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்‌.)



  1. ஒவ்வொரு பாடத்திற்கும்‌ குறைந்த பட்சம்‌ 4 உள்நிலைத்‌ தேர்வுகள்‌நடத்தப்பட வேண்டும்‌.

  2. உள்நிலைத்‌ தேர்வுகள்‌ 40 முதல்‌ 45 நிமிடங்கள்‌ வரை நடைபெறும்‌வகையில்‌, வகுப்பு நேரங்களிலோ அல்லது சிறப்பு வகுப்பு நேரங்களிலோ நடத்தப்பட வேண்டும்‌.

  3. ஒவ்வொரு பாடத்திற்குமான உள்நிலைத்‌ தேர்வுகள்‌ சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களால்‌ நடத்தப்பட வேண்டும்‌.


     4. உள்நிலைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌ தேதி பற்றிய விவரத்தினை மாணவர்களுக்கு குறைந்த பட்சம்‌ இரு                     நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்‌ அறிவிக்க வேண்டும்‌.



  1. குறிப்பிட்ட ஒரு பாடத்தின்‌உள்நிலைத்‌ தேர்வுக்கும்‌, அதே பாடத்தின்‌ அடுத்த உள்நிலைத்‌ தேர்விற்கும்‌ இடையில்‌ குறைந்தபட்சம்‌ 10 நாட்கள்‌ இடைவெளி இருக்க வேண்டும்‌. இரு வெவ்வேறு பாடங்களுக்கு இடையில்‌ இந்த இடைவெளி இருக்க வேண்டிய அவசியமில்லை.

  2. 25 மதிப்பெண்களுக்கு உள்நிலைத்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட வேண்டும்‌.


சம்பந்தப்பட்ட பாட ஆசிரியராலேயே வினாத்தாள்‌ வடிவமைக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட வேண்டும்‌. வினாத்தாள்‌ மற்றும்‌ விடைத்தாட்களை கோப்பில்‌ வைத்திருக்கவேண்டும்‌.



  1. உள்நிலைத்‌ தேர்வுக்கான மதிப்பெண்‌ விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவித்து, விடைத்தாட்களில்‌ அவர்களது கையொப்பத்தினை பெற வேண்டும்‌.

  2. உயிரியல்‌ பாடத்தில்‌, தாவரவியல்‌ மற்றும்‌ விலங்கியல்‌ ஆகிய இரு பாடங்களுக்கும்‌ சேர்த்து குறைந்த பட்சம்‌ நான்கு உள்நிலைத்‌தேர்வுகள்‌ நடத்தப்படவேண்டும்‌.

  3. உள்நிலைத்‌ தேர்வுகள்‌ தொடர்பான பதிவேடு சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரால்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌.


ஒப்படைவு / செயல்‌ திட்டம்‌ / களப்பயணம்‌ : அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌


பாடங்களுக்கேற்றவாறு ஒப்படைவு (Assignment) அல்லது செயல்‌ திட்டம்‌ (Project) அல்லது களப்பயண அறிக்கை (Field Visit Report) இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள்‌ தேர்வு செய்துகொள்ளலாம்‌. ஆனால்‌, மேற்குறிப்பிட்ட மூன்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை மட்டுமே ஒரு வகுப்பில்‌ உள்ள அனைத்து மாணவர்களுக்கும்‌ ஒரே சீராக ஒதுக்கீடு செய்தல்‌ வேண்டும்‌.


கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌: அதிகபட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌


கீழ்க்குறிப்பிட்ட 33 செயல்பாடுகளுள்‌, குறைந்தபட்சம்‌ ஏதேனும்‌ மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு அதிக பட்சம்‌ 2 மதிப்பெண்கள்‌ அகமதிப்பீடாக வழங்கப்பட வேண்டும்‌.




மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள்‌ குறித்த விவரம்‌, அறிவிப்புப்‌ பலகை வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்‌. அகமதிப்பீட்டு மதிப்பண்களை இணையதளம்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்வது குறித்த அறிவுரைகள்‌ இவ்வியக்ககத்தால்‌ பின்னர்‌ தெரிவிக்கப்படும்‌.


மேலே கூறியவற்றைப் பின்பற்றி வருகைப் பதிவு, தேர்வுகள், செயல் திட்டங்கள், கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.