இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் நுழைவுத் திட்டம் என்ற தலைப்பில் இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் பட்டப் படிப்புகளுக்கு (TGC 134 Technical Graduate Course) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பாடத்திட்டத்தை ஜனவரி 2022-இல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்களை நாளை  (17 ஆக்ஸ்ட் 2021) முதல் செப்டம்பர் 15, 2021 வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ராணுவத்தில் ஆள்சேர்ப்பு என்பது எப்போதுமே முற்றிலும் வெளிப்படையான நடைமுறைகளைக் கொண்டது. அதேபோல், இலவசமானதும் கூட. ஆகையால் இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்த அறிவிப்பாணை தொடர்பாக மேலதி விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இந்த குறிப்பிட்ட பாடப் பிரிவு மட்டுமல்லாது,  இந்திய இராணுவம் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


ஆண்டுக்கு இருமுறை:


இந்திய ராணுவமானது, டெக்னிக்கல் பட்டப் படிப்புகளுக்கு (TGC Technical Graduate Course) ஆண்டுக்கு இருமுறை அழைப்பு விடுக்கிறது. ஜனவரியில் ஒருமுறை, ஜூலையில் ஒரு முறை என இரண்டு முறை அறிவிப்பாணை வெளியிடுகிறது. ஜனவரியில் தொடங்கும் பயிற்சிக்கு மே ஜூன் காலகட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.


இதில் பயிற்சியை முடிக்கும் பட்சத்தில் ராணுவத்தில் அதிகாரிகளாகப் பணியில் சேரலாம். பொறியியல் படிப்பில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்வோருக்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.23 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். 6 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், மேஜர் அந்தஸ்துக்குப் பதவி உயரலாம்.