இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. சுதந்திர தினத்தை ஒட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஏபிபி நாடு சார்பில், சில டிப்ஸை வழங்குகிறோம்.
போட்டிகளில் என்ன பேசலாம்/ எழுதலாம்?
’’அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
நாடு முழுவதும் இன்று நாம் அனைவரும் 78ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இது மற்றுமொரு வழக்கமான விடுமுறை நாள் அல்ல.
கடந்த1947ஆம் ஆண்டு இதே நாளில்தான் நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்தோம். இந்தியா அடிமைத் தளையில் இருந்து சுதந்திரம் பெற, எண்ணற்ற தலைவர்கள் தன்னுயிரைப் பொருட்படுத்தாதது தீரத்துடன் போராடினார்கள்.
தேசத் தந்தை மகாத்மா காந்தி அறத்தின்பால் நின்று, அமைதியுடன் சுதந்திரப் போராட்டம் கோரினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தைரியத்தின் வழியில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்து நின்றார். காந்திக்குப் பின்னாலும் சுபாஷின் பின்னாலும் ஆயிரக்கணக்கான தேச பக்தர்கள் அணிவகுத்து நின்றனர். விடுதலைப் போராட்ட நாட்களில் அவர்களது தியாகத்தாலும் வீரத்தாலுமே நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம், இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் பிறந்த நாம், நம் பாரதத் திருநாட்டை மேலும் வலிமைப்படுத்தவும் வளர்ச்சி அடைய வைக்கவும் பாடுபட வேண்டும். தாய்த் திருநாட்டுக்கு நம்மால் ஆன பணிகளை மேற்கொள்வோம் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் நன்றி’’.
இதுபோன்ற கருத்துகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.