தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து நேற்று பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 89 மாணவர்கள், 4 லட்சத்து 60 ஆயிரத்து 247 மாணவியர் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு துறை கண்காணிப்பாளர்களாக 51 ஆயிரத்து 710 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 3050 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட 23,302 மாணவர்களும், 22,217 மாணவிகளும் எனக்கு மொத்தம் 45,519 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெற்று 425 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வை சந்திக்கவுள்ளார் பள்ளி மாணவர்களுக்காக 176 மையங்களும், தனித்தேர்வர்களுக்கான 6 மையங்களும் என சேலம் மாவட்டம் முழுவதும் 182 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் சேலம் மாநகராட்சி கோட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகப்படியான மாணவர்கள் தேர்வு எழுதினர்.
மாணவர்களுக்கான இருக்கை, குடிநீர், கழிவறை மற்றும் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை தயார் நிலையில் வைக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கான தேர்வு அறை ஒதுக்கீடு, தேர்வு என் ஒட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் மாவட்டத்தில் துறை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர், வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலர், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, குழு அலுவலர்கள் என 3 ஆயிரத்து 692 கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பொது தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தேர்வு கட்டுப்பாட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 6 இடங்களிலும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு அறைக்குள் செல்லா அனுமதித்தனர். தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் மையத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 5 சதவிகித மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு குடும்ப சூழலா? உடல்நிலை பாதிப்பா?, தேர்வு எழுத பயமா? அல்லது குழந்தை திருமணம் காரணமா? என்பது குறித்து கண்டரிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டம், குழந்தைகள் நல குழுமம், இல்லம் தேடி கல்வி திட்டம், ஒருங்கிணைந்த கல்வி அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களை கொண்டு வீடு வீடாகச் சென்று விசாரணை செய்து மீண்டும் அவர்களை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.