தமிழாசிரியர் பணிகளில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு; அறிவிப்பை உடனே திரும்பப் பெறக் கோரிக்கை!

தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?- சு.வெங்கடேசன்

Continues below advertisement

இந்தியத் தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தமிழாசிரியர் ஆகப் பணியாற்ற வேண்டிய தேவைக்கு இந்தி, சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.

Continues below advertisement

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தேவைப்படும் காலங்களில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு விளம்பரத்தை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு வெளியிட்டுள்ளது.  

இந்தி, சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி

அதில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சு.வெங்கடேசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’தமிழாசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்? வெளியுறவுத் துறையின் அப்பட்டமான இந்தி திணிப்பு மற்றும் தமிழ் விரோத முயற்சிக்கு எனது கடும் கண்டனம். வெளியுறத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு

முன்னதாக, ’’தமிழர்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை. இந்தி ஆசிரியர் பணிக்கோ, சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கோ தமிழ் மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்படாத நிலையில், தமிழாசிரியர் பணிக்கு மட்டும் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு ஆகும். இதை அனுமதிக்க முடியாது.

எனவே, தமிழாசிரியர் நியமனம் தொடர்பான விளம்பர அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement