பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பணிபுரியக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், கற்றல் இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் இடைவெளி / இழப்பை ஈடுசெய்ய அரசு முடிவெடுத்தது. இதற்காக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்கீழ் பயிற்சி மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் மாலையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒன்றில் இருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளப்படுகின்றன.


1 - 8ஆம் வகுப்பு வரை சிறப்புப் பயிற்சி


அனைத்து குழந்தைகளும் கல்வியில் அடிப்படையான எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கு உறுதுணை புரியும் வகையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களில் சிறப்பு கவனம் தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி மையங்களில் தனிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்குக் கிடைத்த வரவேற்பைப் பொறுத்து, 8ஆம் வகுப்பு வரை பயிற்சி நீட்டிக்கப்பட்டது.


இதில் பங்கேற்று பயிற்சி அளிக்கும் தன்னார்வலர்களில் பெரும்பாலானோர், பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்- ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து இவ்வாறு செய்து வருகின்றனர்.


தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை


இதுதொடர்பான புகார்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகம், அனைத்து அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில், “இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை எந்தக் காரணங்கள் கொண்டும் பகல் நேரத்தில் பள்ளிக்கு வரவழைத்து, வகுப்பறையைப் பார்க்கச் சொல்வதோ, பள்ளியில் உள்ள வேலைகளை செய்யச் சொல்வதோ இனி இருக்கக் கூடாது.


தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


பள்ளியில் நாங்கள் ஆய்வு செய்ய வரும்போது, இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர் வகுப்பறையில் இருந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் மட்டும்தான், வகுப்பறையில் இருக்க வேண்டும். இவர்களைத் தவிர வேறு யாரையும் பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிகிறது. அதே நேரத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.