உடல் குறைபாடு என்பது வெற்றிக்கான தடையல்ல, அது மன உறுதிக்கு விடப்படும் சவால் என்பதை நிரூபித்துள்ளார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் மான்வேந்திர சிங். செரிப்ரல் பால்சி எனும் தீவிர நரம்பியல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் மான்வேந்திர சிங். இவர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025-ஆம் ஆண்டிற்கான இந்தியப் பொறியியல் சேவைகள் தேர்வில் (ESE) முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 112-வது இடத்தைப் பிடித்துச் சரித்திரம் படைத்துள்ளார்.
தாயின் அரவணைப்பும் விடாமுயற்சியும்
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த 24 வயதான மான்வேந்திராவிற்கு, 6 மாதக் குழந்தையாக இருந்தபோதே இக்குறைபாடு கண்டறியப்பட்டது. இதனால் அவருக்குத் தசைகள் இறுகி, இயல்பான அசைவுகள் மற்றும் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக அவரது வலது பக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தனியார் பள்ளி முதல்வரான அவரது தாயார் ரேணு சிங் சோர்ந்து போகவில்லை. மகனின் வலது கை செயல்படாத நிலையில், அன்றாடப் பணிகள் முதல் பேனாவைப் பிடித்து எழுதுவது வரை அனைத்தையும் இடது கையில் செய்ய அவருக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்தார். தாயின் ஊக்கமும், மான்வேந்திராவின் விடாமுயற்சியும் அவரை மெல்ல மெல்லச் செதுக்கியது.
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்
பள்ளிக்காலம் முதலே படிப்பில் கெட்டிக்காரரான மான்வேந்திரா, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்தார். பின்னர், நாட்டின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான ஐஐடி ஜேஇஇ தேர்வில் முதல் முயற்சியிலேயே 63-வது ரேங்க் பெற்று அசத்தினார். இதன் மூலம் பாட்னா ஐஐடியில் இடம் கிடைத்து, மின்னணு மற்றும் மின் பொறியியல் துறையில் 2024-ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
யுபிஎஸ்சி வெற்றி
பொறியியல் படிப்பை முடித்த கையோடு, மூன்று நிலைகளைக் கொண்ட (முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு) மிகக் கடினமான யுபிஎஸ்சி பொறியியல் சேவைகள் தேர்வை எதிர்கொண்டார். தனது கடுமையான உழைப்பால், இதிலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று 112-வது ரேங்க் எடுத்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வரும் தனது தம்பி மற்றும் தங்கைக்கு இவர் தற்போது ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகத் திகழ்கிறார். மான்வேந்திர சிங்கின் இந்த வெற்றி, உடல் குறைபாடுகளுடன் போராடும் பல இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.