ஐஐடி சென்னை மாணவர்கள் மாதவிடாயின்போது சுத்தத்தைப் பேணுதல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தற்காப்பு ஆகியவற்றுக்காக ’அன்ம்யூட்’ என்னும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். ஐஐடி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்த்ரா 2022 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 


சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்கள் ’அன்ம்யூட்’ என்னும் சமூக நல இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அன்மியூட் என்று அழைக்கப்படும் அந்தத் திட்டத்தில் மாதவிலக்கின்போது சுத்தமாக இருத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சியின் மூலமாக, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் பெண்களைக் குரல் எழுப்பச் செய்வது நோக்கமாகும். மேலும், பாலியல் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் ஐஐடி சென்னை  நடத்தும் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், சுடர், Go-Hygiene, CRY, சாக்யா, ஸ்வயம் போன்ற அரசு சாரா அமைப்புக்களுடன் ஐஐடி சென்னை மாணவர்கள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 


இந்த இயக்கம் குறித்துப் பேசிய ஐஐடி சென்னை சாஸ்த்ரா 2022 ஆசிரியர் குழு ஆலோசகர் டாக்டர் ரத்னகுமார் அன்னபட்டுலா, ''இந்த ஆண்டில் சாஸ்த்ரா குழுவினர் அன்மியூட் இயக்கத்தைச் செயல்படுத்திட மாபெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு என்ஜிஓ-க்களின் ஒத்துழைப்புடன் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், உலகில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் கூடிய வாழ்க்கையை நடத்த நீண்டகாலத்திற்கு இந்த இயக்கம் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றனர்'' என்று கூறினார்.


ஒவ்வோர் ஆண்டும் சுமார் 23 மில்லியன் சிறுமிகள் தங்களுக்கு மாதவிடாய் தொடங்கியதும் பள்ளிப்ப டிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர் என்று யூத்கி ஆவாஸ் 1 என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 15 முதல் 24 வயது வரையிலான பெண்களில் 62 சதவிகிதத்தினர் இன்னமும் மாதவிடாயின்போது துணிகளையே பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாதவிடாயின்போது சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவம் பற்றி சிறுமிகளுக்கு எடுத்துரைத்து விளக்க வேண்டியதன் தேவையை இந்தப் புள்ளிவிவரங்கள் வலியுறுத்துகின்றன. மேலும், மாதவிடாயின்போது எவ்வாறு சுத்தமாக இருப்பது என்பது பற்றி சிறுமிகளுக்கு விளக்குவதோடு, அதற்கான சாதனங்களையும் அவர்களுக்குத் தருவது மாணவர்களின் நோக்கமாகும்.



இந்த முன்முயற்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள்:


1. மாதவிலக்கு சுத்தம் விழிப்புணர்வுக் கூட்டங்கள்


மாதவிடாயின்போது சுத்தமாக இருப்பது பற்றி சிறுமிகள்/ பெண்களுக்கு ஆன்லைனிலும்/ நேராகவும் உரையாற்றிட என்ஜிஓ-க்களைச் சேர்ந்த மாதவிடாய் பற்றி பயிற்சி பெற்றவர்கள் அழைக்கப்படுவார்கள். மாதவிடாயின்போது சுத்தமாக இருப்பது, அவ்வாறு சுத்தமாக இல்லாவிடில் எவ்வாறு நோய்கள் உண்டாகும் என்பது பற்றி அவர்கள் பேசுவதோடு, மாதவிடாயின்போது நல்ல உடல் சுத்தத்தை எவ்வாறு பேணுவது என்பது
பற்றியும் கற்பிப்பார்கள், முடிவில், பெண்களுக்கு நாப்கின்கள் வினியோகிக்கப்படும்.


2. தற்காப்பு 


இப்போதும்கூட ஏன் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் ஏற்படுகின்றன, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது எப்படி, அபாயகரமான நிலைமைகளை அடையாளம் கண்டு, எளிமையான நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள உதவுவது ஆகியவை பற்றியும் உரைகள் நிகழ்த்தப்படும்.


இவ்வாறு ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.