இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னை ஐஐடியின் 'ஐஐடிஎம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன்' (IITM Pravartak), ஐரோப்பாவின் முன்னணி விமானப் போக்குவரத்து பல்கலைக்கழகமான பிரான்ஸ் நாட்டின் ‘இனாக்’ (ENAC) உடன் இணைந்து செயல்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ‘விமானப் பாதுகாப்பு மேலாண்மை’ (Aviation Safety Management - ASM) குறித்த உயர்தரப் பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது. ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தின் ஆதரவுடன் இத்திட்டம் நடத்தப்படுகிறது.
முக்கியத் தேதிகள் மற்றும் விவரங்கள்
இப்பயிற்சியின் இரண்டாவது பேட்ச் (Batch 2) வகுப்புகள் 2026 பிப்ரவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 30 இடங்கள் மட்டுமே உள்ளன. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 ஜனவரி 31 கடைசித் தேதியாகும்.
விருப்பமுள்ளவர்கள் https://digitalskills.iitmpravartak.org.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது dsa@iitmpravartak.net என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை, மற்றும் பராமரிப்பு நிறுவனங்களில் (MRO) பணிபுரியும் நடுத்தர மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுக்கு இந்தப் படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வகுப்பு நடைபெறும் முறை
இது இரண்டு ஆண்டு காலப் பயிற்சியாகும். பிரான்ஸ் நாட்டிலிருந்து வரும் 'இனாக்' (ENAC) பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், டெல்லியில் உள்ள ஐஐடி வளாகத்தில் (IIT Delhi) நேரடியாக வகுப்புகளை நடத்துவார்கள். முதல் ஆண்டில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 4- 5 நாட்களும், இரண்டாம் ஆண்டில் மாதம் ஒருமுறை 4- 5 நாட்களும் வகுப்புகள் நடைபெறும். மேலும், இதில் 6 மாத கால ஆய்வுத் திட்டமும் (Dissertation) அடங்கும்.
இது குறித்து ஐஐடிஎம் பிரவர்தக் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சங்கர் ராமன் கூறுகையில், "விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்ப அறிவும், சரியான முடிவெடுக்கும் திறனும் கொண்ட நிபுணர்கள் அவசியம். முதல் பேட்ச் மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்புத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்," என்று தெரிவித்தார்.