ஐஐடி சென்னை, அதிநவீனத் தொழில்நுட்பங்கள், நிர்வாகத் திறன் (Frontier Technologies & Governance) ஆகிய துறைகளில் எம்.டெக், எம்.ஏ. படிப்புகளைத் தொடங்கியுள்ளது.
செமிகண்டக்டர் பொருட்கள் தொழில்நுட்பம் (Semiconductor Materials Technology), ரோபாட்டிக்ஸ் (Robotics), இயந்திர அமைப்புகளுக்கான கணக்கீட்டுப் பொறியியல் (Computational Engineering for Mechanical Systems), பொதுக் கொள்கை (Public Policy) ஆகியவற்றில் புதிய பாடத்திட்டங்களில் தொழில்நுட்பம், உற்பத்தி, நிர்வாகம் போன்ற வளர்ந்துவரும் தேசிய முன்னுரிமைப் பிரிவுகளில் திறமையாளர்களைத் தயார்படுத்துவதே இதன் நோக்கம்.
ஐஐடி சென்னை பொதுக்கொள்கையில் முதுகலைப் பட்டம் (MA), செமி கண்டக்டர் பொருட்கள், இயந்திர அமைப்புகளில் கணக்கீட்டுப் பொறியியல், ரோபாட்டிக்ஸ் போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு (M.Tech) உள்பட பல்வேறு புதிய முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.
நிர்வாகத் திறன், தொழில்துறை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உருவாகிவரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான மேம்பட்ட அறிவையும் திறன்களையும் மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இப்பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்பம், சமூக- பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத துறைகளில் நிபுணத்துவத்தை வளர்த்தெடுப்பதில் இக்கல்வி நிறுவனம் எந்த அளவுக்கு கவனமாக உள்ளது என்பதை எடுத்தியம்பும் வகையில் ஐஐடி சென்னையின் பல்வேறு துறைகளை உள்ளடக்கி இப்பாடத் திட்டங்கள் அமைந்துள்ளன.
பாடத்திட்டங்களின் சிறப்பம்சங்கள்
- மானுடவியல், சமூக அறிவியல் துறையின் சார்பில் பொதுக்கொள்கையில் எம்.ஏ. பட்டம் (MA in Public Policy by Department of Humanities and Social Sciences)
- உலோகவியல் மற்றும் பொருள் பொறியியல் துறையின் சார்பில் செமிகண்டக்டர் பொருள் தொழில்நுட்பத்தில் எம்.டெக் பட்டம்
- இயந்திரப் பொறியியல் துறையின் சார்பில் இயந்திர அமைப்புகளுக்கான கணக்கீட்டுப் பொறியியலில் சிறப்புப் பிரிவுடன் கூடிய எம்.டெக் இயந்திரப் பொறியியல் பட்டம்
- பொறியியல் வடிவமைப்புத் துறை சார்பில் எம்.டெக். ரோபாட்டிக்ஸ் பட்டம்
எதற்கு இந்தப் படிப்பு?
சிக்கலான சமூக, பொருளாதார, அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்காக அரசாங்கங்களும் நிறுவனங்களும் எவ்வாறு கொள்கைகளை வடிவமைத்துச் செயல்படுத்துகின்றன என்பது குறித்த ஆழமான புரிதலை மாணவர்களுக்கு எம்.ஏ. பொதுக் கொள்கை பட்டப்படிப்பு வழங்கும்.
சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து, சர்வதேச உறவுகள் உள்ளிட்ட பல்வேறு கொள்கைத் துறைகளை இப்பாடத்திட்டம், உள்ளடக்கியுள்ளது. மாணவர்களுக்கு விமர்சன சிந்தனை, நிர்வாகக் கட்டமைப்புகள், கொள்கைப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதுடன், தகவல் தொடர்பு, தலைமைத்துவத் திறன்கள் போன்றவற்றையும் இப்பாடத்திட்டம் வலுப்படுத்தும்.
அரசு, சர்வதேச அமைப்புகள், லாப நோக்கின்றிசெயல்படும் நிறுவனங்கள், சமூக ஆதரவுக் குழுக்கள், தனியார் துறை போன்றவற்றில் பட்டதாரிகளைப் பணிக்குத் தயார்படுத்துவதே பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.
இப்பட்டப் படிப்புகள், மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை https://mtechadm.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
