ஐஐடி சென்னை வரலாற்றிலேயே முதல்முறையாக முன்னாள் மாணவர் ஒருவர் அகில இந்திய அளவில் மிகப்பெரிய தொகையாக 228 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கல்வி நிறுவனம் ஒன்றுக்கு இதுவரை வழங்கப்பட்டதில் மிகப்பெரிய தொகையான இந்த நன்கொடை, ஆராய்ச்சி, ஐஐடி மெட்ராஸில் பயிலும் சர்வதேச ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவித் தொகை, மாணவர் உதவித் தொகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையை மதிப்புமிகு முன்னாள் மாணவர் விருது பெற்ற டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா வழங்கியுள்ளார். இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற நிகழ்வில், டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக கல்வி நிறுவனப் பகுதி ஒன்றுக்கு ‘கிருஷ்ணா சிவுகுலா பிளாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நன்கொடை எதற்கு?
இந்த நன்கொடையைக் கொண்டு ஐஐடி மெட்ராஸில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிக்கான சிறப்பு மானியத் திட்டம், ஐஐடி மெட்ராஸில் புதிய மாணவர்களுக்கான இளங்கலைப் பட்ட கல்வி உதவித்தொகை திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான பாடத்திட்டம், சாஸ்த்ரா இதழை மேம்படுத்துதல், கிருஷ்ணா பிளாக் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
யார் இந்த கிருஷ்ணா சிவுகுலா?
டாக்டர் கிருஷ்ணா சிவகுலா ஐஐடி மெட்ராஸ்-ல் 1970ம் ஆண்டில் ஜெட் புரபல்சனில் முதுகலைப் பட்டம் (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) பெற்றவர். அத்துடன் 1980ம் ஆண்டில் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
நியூயார்க்கில் உள்ள ஹாஃப்மேன் குழும நிறுவனங்களில் குழுமத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய பின்னர், திரு. சிவகுலா இரண்டு ‘உலகின் நம்பர் ஒன்’ நிறுவனங்களை அடுத்தடுத்து நிறுவினார். அதி உயர் தூய்மைப் பொருட்களைச் சான்றிளிக்க அட்வான்ஸ்ட் மாஸ் ஸ்பெக்ட்ரோகோபி-யில் நிபுணத்துவம் பெற்ற ஷிவா டெக்னாலஜிஸ் இன்க். என்ற நிறுவனத்தை 1990-ம் ஆண்டில் நிறுவினார். அதிக அளவில் சிக்கலான வடிவவியலுடன் கூடிய சிறிய உலோகம் மற்றும் செராமிக் பாகங்களைத் தயாரிக்கும் எம்ஐஎம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை பெங்களூருவில் நிறுவினார்.
இவர், 1997-ல் ‘மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங்’ (எம்ஐஎம்) எனப்படும் அதிநவீன பொறியியல் உற்பத்தித் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார். அமெரிக்காவில் அப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக இருந்த்து. அவரின் இந்தோ- யுஎஸ் எம்ஐஎம் டெக். நிறுவனம் திறன் மற்றும் விற்பனையின் அடிப்படையில் ஏறத்தாழ ரூ.1000 கோடி வருவாயுடன் எம்ஐஎம் தொழில்நுட்பத்தில் உலகிலேயே முதலிடத்தை வகிக்கிறது.
இதையொட்டி கிருஷ்ணா சிவுகுலா தாம் படித்த கல்வி நிறுவனத்தை ஆதரிப்பதற்கான உந்துதல்களை விளக்கிப் பேசியபோது, “ஐஐடி மெட்ராஸில் எனது கல்வி மிகவும் மறக்க முடியாததாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்ததுடன் வாழ்க்கையில் பலவற்றைச் சாதிக்கவும் எனக்கு உதவியது. அகில இந்திய அளவில் எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்ட தொகையைவிட மிகப்பெரிய நன்கொடையை வழங்கி, நான் படித்த கல்வி நிறுவனத்திற்கு ஒரு பரிசாக திருப்பிச் செலுத்தும் நிலையில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ்-ன் நிதி திரட்டுதல்
2023-24ம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் வரலாற்று நிகழ்வாக ரூ.513 கோடி நிதி திரட்டியது. இது முந்தைய நிதியாண்டைவிட 135% அதிகமாகும்.