ஐஐடி காரக்பூர் கல்லூரி நிர்வாக பட்டமளிப்பு விழாவில் மாணவ- மாணவிகளுக்கு ஆடை விதிமுறைகளை அறிவித்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.


நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இவற்றில் சேர்ந்து படிப்பது என்பது மாணவர்களுக்கும் பெற்ரோர்களுக்கும் பெருமை தரக்கூடிய ஒன்று என்றே சொல்லலாம். ஐஐடியில் சேர்வதை கனவாகவே வைத்திருக்கும் மாணவர்கள் பலர். 


அந்த வகையில் நாடு முழுவதும் 23 ஐஐடிகள் இயங்கி வருகின்றன. இங்கு சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஐஐடி காரக்பூர் 1951 முதல் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் பட்டமளிப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  


அதன்படி, மாணவர்களுக்கு முழுக்கை காட்டன் குர்தா, அதற்கு உள்ளே வெள்ளை பனியன் அணிந்திருக்க வேண்டும். கீழே பைஜாமா அணிய வேண்டும், இந்திய பாரம்பரிய பழுப்பு வண்ண மூடப்பட்ட வகை காலணி அல்லது கோலாபுரி வகை காலணியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவிகளுக்கு என்ன விதிமுறை?


வெண்ணிற தங்க நிற பார்டர் வைத்த சேலை, கை வைத்த ஜாக்கெட் (ஸ்லீவ்லெஸ் ஆடைக்கு அனுமதி இல்லை) மட்டும்தான் அணிந்திருக்க வேண்டும். இந்திய பாரம்பரிய பழுப்பு வண்ண மூடப்பட்ட வகை காலணி அல்லது கோலாபுரி வகை காலணியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஸ்ட் வாட்ச்சுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் நகை அணியும்பட்சத்தில் சிறிய வகை கழுத்து செயினை அணியலாம். கையில் எளிய வகை இரண்டு வளையல்கள், மோதிரங்களை அணியலாம். எளிமையான தோடுக்கு அனுமதி உண்டு. எனினும் தொங்கும் வகையிலான தோடுகளுக்கு அனுமதி இல்லை.




இந்த கட்டுப்பாடுகளுக்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். 


கடந்த ஆண்டும் வெண்ணிற ஆடைகள் மற்றும் புடவை மட்டுமே அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் இந்த முறை கட்டுப்பாடுகள் அதிகமாகி உள்ளன.  இதைக் குறிப்பிட்டு மாணவர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.