ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனத்தில் பயின்ற பட்டதாரி லோமடா நாகேந்திர சாய், 14 வெவ்வேறு மத்திய அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அரசு வேலைக்காகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், "தொடர்ந்து போராடுங்கள், தொடர்ந்து தயாராகுங்கள்" என்ற செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

கடப்பாவைச் சேர்ந்த சாய், இந்தியாவின் முதன்மை தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூரில் பட்டம் பெற்றார். ஆரம்பத்தில் சாய் ஐ.டி. பணிக்குச் செல்லவே ஆசைப்பட்டார். கோவிட் 19 காலத்தில் உயர்மட்ட கார்ப்பரேட் வேலைகளில் லே ஆஃப் நடந்ததைப் பார்த்தவர், அரசுப் பணிகளுக்குச் செல்ல முடிவெடுத்தார்.

14 மத்திய அரசுத் தேர்வுகளில் வெற்றி

மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முழுமையாகக் கவனம் செலுத்தினார். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஹைதராபாத்துக்குக் குடிபெயர்ந்தவர். 3 ஆண்டுகளுக்கு தினந்தோறும் சுமார் 12 மணி நேரம் படித்தார். அதன் விளைவாக, தொடர்ச்சியாக 14 மத்திய அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளார்.

Continues below advertisement

என்னென்ன தேர்வுகள்?

இவர் தேர்ச்சி பெற்ற 14 தேர்வுகளில், பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி, ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள், எம்டிஎஸ் மற்றும் வங்கித் துறைக்கான தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மைய அரசுப் பணித் தேர்வுகள் அடங்கும்.

இறுதியாக நாகேந்திர சாய் தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (ESIC) சமூகப் பாதுகாப்பு அதிகாரியாக சேர்ந்துள்ளார். தனது இந்தப் பயணத்தை இணையத்தில் பகிர்ந்துகொண்ட அவர், போட்டித் தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சில அறிவுரைகளைக் கூறி உள்ளார்.

  • போட்டித் தேர்வுகளில் ஆரம்பத்தில் ஏற்படும் தோல்விகளையோ, பின்னடைவுகளையோ கண்டு துவண்டுவிடக் கூடாது.
  • உங்களுக்கான இலக்கை அடையும் வரை நம்பிக்கையைக் கைவிடக் கூடாது.
  • "தொடர்ந்து போராடுங்கள், தொடர்ந்து தயாராகுங்கள்" என்பதே வெற்றிக்கான அடிப்படை மந்திரம் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடும் போட்டி நிறைந்த தற்போதைய சூழலில், ஐஐடி பட்டதாரி ஒருவரின் இந்த விடாமுயற்சி, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. சரியான திட்டமிடலும், கடின உழைப்பும் இருந்தால் எத்தனை தேர்வுகளில் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவரது பயணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.