ஐஐடிகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை இனி சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டில் கோலாலாம்பூர் மற்றும் லாகோஸ் பகுதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. முன்னதாக 12 நாடுகளில் ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றன.
இந்த நிலையில், உலகம் முழுவதும் 25 நாடுகளில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், சீனா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, பஹ்ரெய்ன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
வெளிநாட்டில் படிக்கும் என்ஆர்ஐக்கள், இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்காக சுமார் 3,900 இளங்கலைப் படிப்புகள் மற்றும் 1,300 முதுகலைப் படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் இந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
வெளிநாட்டில் மாணவர்களின் நேரடிச் சேர்க்கை (DASA) திட்டத்தின்கீழ் இந்த மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட உள்ளது. என்ஐடி, ஐஐஐடி, என்ஐஎஃப்டி உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடத்தப்படும். என்ஆர்ஐ மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்காக மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். எனினும் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் டாசா திட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்படாது.
இந்தத் திட்டத்துக்காக, 63 நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
இந்த தேர்வு தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்