தமிழ்நாட்டில், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் , மதிய உணவுத் திட்டம் , இலவச பேருந்து பயணம் ( பஸ் பாஸ் ) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று, கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய், மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை:
இந்நிலையில், மத்திய அரசு கல்வி நிலையங்களான ஐஐடி, ஐஐஎம், என்.ஐ.டி ஆகிய கல்வி நிலையங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ( BC,MBC,DNC ) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு ரூ, 2 லட்சம் வரையிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, குடும்ப வருமானம், வருடத்திற்கு 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது , மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தருணத்தில், 2024-25ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள், அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளத்திலோ அல்லது கீழ்கண்ட முகவரியிலுள்ள அலுவலகத்தில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5 அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலோ சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பத்தை பெற்று, தேவையான தகவல்களை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம்.
எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5.
தொலைபேசி எண்: 044-29515942
மின்னஞ்சல் முகவரி - tngovtiitscholarship@gmail.com
ஏதேனும், விண்ணப்பம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் எழுந்தால், உதவி எண்களை அழைத்து தெளிவு பெற்றுக் கொள்ளவும். அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளவும்.