ஐஐடி மும்பையிலேயே 36% மாணவர்களுக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், தலைசிறந்த கல்வி நிறுவனத்திலேயே வேலைவாய்ப்புகள் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


கேம்பஸ் ப்ளேஸ்மென்ட்டுகள் குறித்த தற்போதைய அறிக்கையின்படி, ஐஐடி மும்பையைச் சேர்ந்த மாணவர்களில் 36 சதவீதம் பேருக்கு இதுவரை வேலை கிடைக்கவில்லை.  


712 மாணவர்களுக்கு இதுவரை வேலையில்லை


இதுகுறித்துத் தனியார் செய்தி ஊடகத்துக்கு கிடைத்த தகவலின்படி, ’’கேம்பஸ் பிளேஸ்மெண்ட்டுகளின்படி பதிவுசெய்த 2000 மாணவர்களில் 712 பேருக்கு தற்போதைய நிலவரத்தின்படி வேலை கிடைக்கவில்லை.


இதுபற்றி ஐஐடி மும்பை பிளேஸ்மென்ட் செல் அதிகாரி கூறும்போது, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை நிறுவனங்களை அழைப்பதில் போராட்டமாக இருக்கிறது. உலகளாவிய பொருளாதார மந்தநிலையே இதற்குக் காரணம்.


பலகட்டப் பேச்சுவார்த்தை


ஏற்கெனவே எங்கள் கல்வி நிறுவனம் முடிவு செய்திருந்த ஊதிய பேக்கேஜ்களை ஒப்புக் கொள்வதில், பெரும்பாலான நிறுவனங்கள் சிக்கல்களைச் சந்திக்கின்றன. வேலைவாய்ப்பு முகாமுக்கு வருவதாக அவர்கள் ஒத்துக்கொள்வதற்கு முன், பலகட்டப் பேச்சுவார்த்தை தேவைப்படுகிறது.


வழக்கமாக கணினி அறிவியல் பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள், எளிதில் வேலை பெறுவார்கள். நல்ல ஊதியமும் கிடைக்கும்.ஆனால் இந்த முறை பதிவு செய்தவர்களில் இருந்து முழுமையான பிளேஸ்மெண்ட் நடைபெறவில்லை. இப்படி நடப்பது இதுவே முதல் முறை. ஐஐடி மும்பையில் தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மே மாதம் வரை பிளேஸ்மெண்ட் நடைபெற உள்ளது.


இந்த ஆண்டு இதுவரை வேலை கிடைக்காதவர்கள், கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் அதிகமாக இருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு, 2,209 மாணவர்களில் , 1485 மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. 32.8 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை.


உள்நாட்டு நிறுவனங்களே பங்கேற்பு


வழக்கமாக ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் நிலையில், இந்த முறை 380 உள்நாட்டு நிறுவனங்களே இதில் கலந்துகொண்டிருக்கின்றன’’ என்று தகவல் வெளியாகி உள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், தலைசிறந்த கல்வி நிறுவனத்திலேயே வேலைவாய்ப்புகள் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


கடந்த ஜனவரி மாதம் ஐஐடி மும்பை மாணவர்கள் 85 பேருக்கு, 1 கோடி ரூபாய் ஆண்டு ஊதியத்தில் வேலை கிடைத்திருப்பதாகத் தகவல் வெளியானது. எனினும் தவறாக தகவல் வெளியிடப்பட்டதாகவும் 22 மாணவர்களுக்கு மட்டும் 1 கோடி ரூபாய் ஆண்டு ஊதியத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும் ஐஐடி மும்பை விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.