ஐசிஏஐ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள சிஏ (CA) தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இதில் சிஏ ஃபவுண்டேஷன் (Foundation), இன்டர்மீடியட் (Intermediate) மற்றும் ஃபைனல் (Final) ஆகிய தேர்வுகளுக்கான தேதிகள், நேர விவரங்கள் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் icai.org என்ற இணையதளத்தை க்ளிக் செய்து, கால அட்டவணையை அறியலாம்.

தேர்வுதேதிகள்விவரம்

ஐசிஏஐ அட்டவணையின்படி, சிஏ ஃபவுண்டேஷன் தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன. அதேபோல, சிஏ இன்டர்மீடியட் தேர்வுகளும் (குரூப் 1 மற்றும் குரூப் 2) செப்டம்பர் மாதத்தில் பல்வேறு தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சிஏ ஃபைனல் தேர்வுகளைப் பொறுத்தவரை, குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய இரு பிரிவுகளுக்கான தேர்வுகளும் நவம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. 

சிஏ ஃபவுண்டேஷன் தேர்வுகள் செப்டம்பர் 2, 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளன. இடைநிலைத் தேர்வுகளில் குரூப் 1 தேர்வு செப்டம்பர் 1, 3 மற்றும் 6 தேதிகளிலும் குரூப் 2 தேர்வு 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன. அதேபோல இறுதித் தேர்வுக்கான குரூப் 1 தேர்வு நவம்பர் 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 தேர்வு நவம்பர் 9, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடக்க உள்ளன. இதற்கான விரிவான தேதி வாரியான அட்டவணையை மாணவர்கள் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

தேர்வுநேரம்

அனைத்துத் தேர்வுகளும் வழக்கமாக மதியம் 2.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும். மாணவர்களுக்கு வினாத்தாளைப் படித்துப் பார்ப்பதற்காக, தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே 15 நிமிடங்கள் (மதியம் 1.45 முதல் 2.00 மணி வரை) கூடுதலாக வழங்கப்படும். இருப்பினும், சில குறிப்பிட்ட தாள்களுக்கு மட்டும் தேர்வு நேரங்களில் சிறிய மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைய மாணவர்கள், ஐசிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான eservices.icai.org வாயிலாக ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மற்றும் அபராதத்துடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் உள்ளிட்ட தகவல்கள் விரிவான அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள குறிப்பிட்ட மையங்களிலும் இந்தத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. மாணவர்கள் எவ்வித குழப்பமுமின்றி தேர்வுக்குத் தயாராகும் வகையில், முன்கூட்டியே இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் ஐசிஏஐ இணையதளத்தைத் தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கூடுதல் விவரங்களுக்கு: https://icai.org/