சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் பணிக்கான 2023ஆம் ஆண்டு இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம். 


இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளர் படிப்புப் படிக்க விரும்புவர்கள், ஐசிஏஐ எனப்படும் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது அவசியம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.


இந்தத் தகுதித் தேர்வு, மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் இந்தத் தேர்வு நடக்கிறது.


தகுதியானவர்கள் யார்?


பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் அனைத்துத் தேர்வுகளையும் எழுத வேண்டும்.


தேர்வு எப்போது?


இதற்கிடையில், சிஏ தேர்வுகள் ஆண்டுதோறும் ஜூன் மாதம், நவம்பர் மாதம் என இரண்டு அமர்வுகளில் நடைபெறுகின்றன. இந்நிலையில் 2023-ம் ஆண்டு நவம்பர் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது. குறிப்பாக டிசம்பர் 24, 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்றது.


இடைநிலைத் தேர்வுகள், குரூப் 1 பிரிவினருக்கு நவம்பர் 2, 4, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 பிரிவினருக்கு நவம்பர் 10, 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன. அதேபோல நவம்பர் மாத அமர்வுக்கான சிஏ இறுதித் தேர்வும் இரு வகையாக நடைபெற்றது. குறிப்பாக குரூப் 1 பிரிவினருக்கு நவம்பர் 1, 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 பிரிவினருக்கு நவம்பர் 9, 11, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன.


இறுதித் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


தேர்வர்கள் icai.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


அதில், Final : November 2023 என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.


அதில் தோன்றும் பக்கத்தில், வரிசை எண், பதிவு எண், கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.


லாகின் ஆகும் பக்கத்துக்குச் சென்று, மதிப்பெண் பட்டியலைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


 இடைநிலைத் தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


தேர்வர்கள் icai.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


அதில், Intermediate Examination : November 2023 என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.


அதில் தோன்றும் பக்கத்தில், வரிசை எண், பதிவு எண், கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.


லாகின் ஆகும் பக்கத்துக்குச் சென்று, மதிப்பெண் பட்டியலைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.


கடந்த ஆண்டு முடிவுகள் எப்படி?


2022ஆம் ஆண்டு 65,291 தேர்வர்கள் குரூப் 1 தேர்வை எழுதிய நிலையில், 13,969 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 18.61 ஆக இருந்தது.


கூடுதல் தகவல்களுக்கு: icai.nic.in