சிஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது  கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.


இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. 


அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.


இந்த நிலையில், 2023-ம் ஆண்டு ஜூன் மாத அமர்வுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற்றது. குறிப்பாக ஜூன் 24, 26, 28 மற்றும் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 290 தேர்வு மையங்களில் 4 தாள்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதன்படி, ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை அல்லது 8ஆம் தேதி காலை சிஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஐசிஏஐ தெரிவித்துள்ளது. 


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


* தேர்வர்கள் icaiexam.icai.org, icai.nic.in மற்றும் caresults.icai.org ஆகிய இணைய முகவரிகளை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். 


* குறிப்பாக மேலே குறிப்பிட்ட இணைய முகவரிக்குச் செல்லவும். அதில், வரிசை எண், பிறந்த தேதி, விண்ணப்ப எண் ஆகியவற்றைப் பதிவு செய்யவும். 


* உங்களின் பக்கத்தில் தேர்வு முடிவுகள் தோன்றும். 


* அதை க்ளிக் செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 


மொபைல் மூலமாகவும் தேர்வு முடிவுகள்


தேர்வர்கள் மொபைல் எண் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.குறிப்பாக 57575 என்ற எண்ணுக்கு CAFND XXXXXX (XXXXXX  என்பது தேர்வரின் 6 இலக்க எண் - roll number ஆகும்.) என்று டைப் செய்து அனுப்பி, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.


ஜூலையில் வெளியான இடைநிலைத் தேர்வு முடிவுகள் 


2023-ம் ஆண்டு மே மாத அமர்வுக்கான இடைநிலைத் தேர்வு மே மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகின.


யார் யார் முதலிடம்?


இடைநிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோகுல் சார் ஸ்ரீகர் என்னும் மாணவர் முதலிடம் பெற்றார். இவர் 800 மதிப்பெண்களுக்கு 688 மதிப்பெண்கள் எடுத்து, 86 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார். அதேபோல பாட்டியாலாவைச் சேர்ந்த நூர் சிங்லா, 682 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 678 மதிப்பெண்களோடு மும்பையைச் சேர்ந்த காவ்யா சந்தீப் 3ஆவது இடத்தைப் பெற்றார்.


இந்திய அளவில் இறுதித் தேர்வில், அகமதாபாத்தைச் சேர்ந்த அக்‌ஷய் ரமேஷ் 616 மதிப்பெண்களை எடுத்து, முதலிடம் பெற்றார். சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் என்ற மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை பிடித்தார். இவர் 800-க்கு 603 மதிப்பெண்கள் பெற்றார்.