மாணவர்கள் படிக்கும்போது ஏற்படும் முக்கியப் பிரச்சினையே, படித்த தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வதில் ஏற்படும் சிரமம்தான். அவர்கள், தேர்வு நேரத்தில் முக்கிய விவரங்களை நினைவுபடுத்த முடியாமல், பல மணிநேர படிப்பு வீணாகிவிடுவதாக உணர்கிறார்கள். இந்த சவாலை சமாளிக்க, நினைவாற்றலை மேம்படுத்துவதே ஒரே வழி.
சரி ஞாபக சக்தியை… படித்ததை திரும்ப நினைவுக்குக் கொண்டு வர என்னென்ன செய்யலாம்? ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி இந்த விஷயத்தில் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்குகிறது.
பெரிய முயற்சிகள் தேவையில்லாத, அதே நேரத்தில் எளிய தினசரி பழக்கவழக்கங்கள் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கலாம் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம், மாணவர்கள் அறிவை மேம்படுத்தவும், படித்ததை நினைவில் கொள்ளவும் முடியும்.
இதோ மாணவர்களுக்கான அறிவியல் பூர்வமான நினைவாற்றல் உத்திகள்
ஒழுங்காக இருங்கள் (Stay Neat and Organised):
உங்கள் படிப்பு சார்ந்த பொருட்களை ஒழுங்காக, ஒரே சீராக வைத்திருப்பது தகவல்களை திறம்பட சேமிக்க மூளைக்கு உதவுகிறது. ஒவ்வொரு பாடத்தின் குறிப்புகளையும் தனித்தனி கோப்புகளில் வைப்பது, உங்கள் சாவியை எப்போதும் ஒரே இடத்தில் வைப்பதைப் போன்றது. இது தகவல்களை விரைவாகக் கண்டறிய உங்கள் மனதுக்குப் பயிற்சி அளிக்கிறது.
மனதில் பதியும் வரை மீண்டும் மீண்டும் படியுங்கள் (Revise Until It Sticks)
திரும்பத் திரும்பப் பயிற்சி செய்வது அறிவை நிரந்தரமாக்குகிறது. மனதுக்குப் பிடித்த பாடலின் வரிகளைக் பலமுறை கேட்பதன் மூலம் நினைவில் வைத்திருப்பதைப் போலவே, ஒரு சூத்திரம் அல்லது வரையறையை பலமுறை சத்தமாகப் படிப்பது அதை நினைவில் பதிய வைக்கிறது.
விவாதிப்பதன் மூலம் நினைவில் வையுங்கள் (Discuss to Remember)
நண்பர்களுடன் பாடங்களைப் பற்றி பேசுவது புரிதலை வலுப்படுத்துகிறது. உதாரணமாக ஒரு அறிவியல் கருத்தை உங்கள் வகுப்புத் தோழருக்கு உங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்கினால், அது மனதில் அச்சாணியாய்ப் பதியும். அதை பின்னர் நினைவுபடுத்திக் கொள்வது எளிதாக இருக்கும்.
மூளைக்கு வேலை (Challenge Your Brain Regularly)
புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நினைவாற்றலை கூர்மையாக்குகிறது. புதிர்களைத் தீர்ப்பது, செஸ் விளையாடுவது, வினாடி வினாக்களில் கலந்துகொள்வது போன்றவற்றைச் செய்தால், நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.
வார்த்தைகளை படங்களாக மாற்றுங்கள் (Turn Words into Pictures)
காட்சியாக்குதல் பொதுவாக நம் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. நீர் சுழற்சியை கற்பனை செய்து பாருங்கள்: மேகங்கள் பலூன்கள் போல வீங்கி மழையைப் பொழிகின்றன. இதுபோன்ற மனப் படங்கள், தட்டையான உரைத் தகவல்களை விட நீண்ட காலம் நினைவில் இருக்கும்.
பயனுள்ள நினைவூட்டல்களைப் பயன்படுத்துங்கள்
குட்டி குட்டி நினைவூட்டல்கள், உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கலாம். "இரவு 8 மணிக்கு உயிரியல் பாடத்தை ரிவைஸ் செய்யவும்" என்ற அலாரம், படிப்புத் திட்டங்களை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுவதை உறுதி செய்கிறது.
பாடங்களை சிறிய பகுதிகளாகப் பிரியுங்கள்
அத்தியாயங்களை சிறிய பகுதிகளாகப் பிரிப்பது அவற்றை எளிதாக்குகிறது. ஒரே நேரத்தில் முழு உணவையும் உண்பதற்குப் பதிலாக, பகுதி பகுதியாக உண்பது எளிது என்பதைப் போலவே, ஒரு நேரத்தில் ஒரு பகுதியை மட்டும் படியுங்கள்.
பாடங்களை படைப்புத் திறனுடன் இணைக்கலாம்
கிரியேட்டிவ் சிந்தனைகள் நினைவாற்றலை எளிதாக்குகின்றன. உதாரணமாக, சனி கிரகத்திற்கு வளையங்கள் இருப்பதை நினைவில் வைத்துக்கொள்ள, அதைச் சுற்றிலும் பொன் வளையங்களைக் கொண்ட ஒரு பெரிய கூடைப்பந்து உள்ளதாகக் கற்பனை செய்து பாருங்கள். இந்த சிந்தனை, படித்ததை நீண்ட காலம் நினைவில் நிறுத்தும்.
கடைசியாக, ஒன்றே ஒன்று..
கஷ்டம்தான்! ஆனாலும்,
கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படியுங்கள்!