அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளுக்கு நாளை (டிச.7) முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக வெளியான சுற்றறிக்கை போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
மிக்ஜாக் புயல் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கோரத் தாண்டவமாடி விட்டு, ஆந்திராவில் நேற்று கரையைக் கடந்தது. புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் வெள்ளம் தெருவைச் சூழ்ந்து, வீடுகளில் புகுந்தது.
4 நாட்கள் விடுமுறை
இதை அடுத்து, டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. மழை படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, நீர் வடியத் தொடங்கி உள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச. 6) விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக சென்னை மாவட்டத்தில், நாளையும் (டிச.7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கும் விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், திருக்கழுங்குன்றம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 07) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 07) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.
போலி சுற்றறிக்கை
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள், எம்ஐடி கல்லூரி, காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரி மையங்கள், துறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு நாளை (டிச.7) முதல் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக இன்று (டிச.6) வாட்ஸப் உள்ளிட்டவற்றில் சுற்றறிக்கை வெளியாகி உள்ளது.
இந்த சுற்றறிக்கை போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துக் கொள்கிறது. எனினும் முந்தைய அறிக்கையின்படி, இந்த வாரத்தில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது உண்மைதான்.
விடுமுறை உண்டா?
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பின் அடிப்படையிலேயே அமையும்'' என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.