மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 3ஆவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் என்று அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பள்ளிக் கல்வித்துறை கூறும்போது, ''பள்ளிக் கல்விக்கான NEP 2020 பரிந்துரைகளின்படி வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட கட்டமைப்பு படிப்படியாகச் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே மகாராஷ்டிராவில் உள்ள பிற மீடிய பள்ளிகளில், மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது.

மும்மொழிக் கொள்கை அமல்

ஏனெனில் மாநிலத்தில் ஆங்கிலம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகள் கட்டாயமாக உள்ளன. அதே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் மராத்தி மீடிய பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே அமலில் உள்ளன. இதனால் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப் படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, மகாராஷ்டிரா மாநில வாரியத்தின் பாடப்புத்தகங்கள் இப்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும், மேலும் மகாராஷ்டிராவின் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக சமூக அறிவியல் மற்றும் மொழிகள் போன்ற பாடங்களில் மாற்றங்களுடன் இருக்கும். 

இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 1ஆம் வகுப்பில் இருந்து இந்தி மொழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.