விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரி. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஐஐடியில் சேர பயிற்சி எடுத்து வந்தார்.

இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்த யோகேஸ்வரி ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் அவருக்கு, நாட்டின் புகழ்பெற்ற மும்பை ஐஐடியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க உள்ளார் யோகேஸ்வரி.

தினக் கூலி தொழிலாளர்களின் மகள்

சிறு வயதில் இருந்தே உயரக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட யோகேஸ்வரி, அதனால் மனம் உடைந்து விடவில்லை. அம்மா பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் நிலையில், அப்பா டீக்கடையில் வேலை பார்க்கிறார். அப்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழிகாட்டலின்கீழ், நான் முதல்வன் திட்டத்தில் பங்கேற்று பயிற்சி எடுத்தார்.

இதில் ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் அட்வான்ஸ்ட் தேர்வுகளில் அடுத்தடுத்துத் தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் ஐஐடி மும்பையில் படிக்கத் தேர்வாகி உள்ளார்.

வெற்றி மாணவி யோகேஸ்வரிக்கு, ’’வாழ்வில் உயரம் செல்ல, உயரம் ஒரு தடையில்லை’’ என்று நெட்டிசன்களும் கல்வியாளர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.