1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 22ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும் நடைபெறுகிறது.
தொடர்ந்து 9, 10ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4. 30 மணி வரையிலும், 11ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறுகிறது. மேலும், 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெறுகிறது.
ஏன் ஒத்திவைக்கப்பட்டது அரையாண்டு தேர்வுகள்..?
முன்னதாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 13ம் தேதி (இன்று) ஒத்திவைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 11ம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் டிசம்பர் 13 முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை திருத்தியமைக்கப்பட்ட கால அட்டவணையை அறிவித்தது.
மிக்ஜாம் புயலால் மாறிய தேர்வு அட்டவணை:
கடந்த டிசம்பர் 4ம் தேதி மிக்ஜாம் புயலின் தாக்குதலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் 4 முதல் 9 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து டிசம்பர் 11ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், அன்று தொடங்கப்பட இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் வளாகங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட சில காரணங்களுக்காக தமிழ்நாடு அரசு ரூ. 1.90 கோடி ஒதுக்கீடு செய்தது.
குறிப்பிடத்தக்க வகையில் மழை மற்றும் வெள்ளத்தில் புத்தகங்கள் சேதமடைந்த அல்லது இழந்த மாணவர்களுக்கு டிசம்பர் 12 ஆம் தேதி பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கல்லூரித் தேர்வுகள்:
பள்ளிகளைப் போல 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளும் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளுக்கு நேற்று முதல் செமஸ்டர் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், நேற்று முதல் (டிசம்பர் 11ஆம் தேதி) தொடங்கி உள்ளன.