நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிலையங்களில் பயிற்சி பேராசிரியர் என்ற பணியிடத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் யுசிஜி சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு முழுமையான மற்றும் பல்துறைக் கல்வியை வழங்க வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளில் ஒன்றாக உள்ளது.
இதற்காக கல்வி சார் துறைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள்/ தொழில்முறை / தொழிற்சாலை நிபுணர்களின் பங்கு அவசியமாகிறது. இதுபோன்ற நிபுணர்களை கல்வி நிறுவனங்களில் பயிற்றுநர்களாக நியமிக்க வசதியாக ‘பயிற்சி பேராசிரியர்’ (Professor of Practice) என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயிற்சி பேராசிரியர்களை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அதைக் கல்வி நிறுவனங்கள் பின்பற்றி நியமனம் செய்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம்.
இதற்கேற்ப, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் தங்களுடைய பணியாளர் நியமன விதிமுறைகளில் உரிய திருத்தங்களை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை, கல்வி நிறுவன செயல்பாடுகளை கண்காணிக்கும் uamp.ugc.ac.in என்ற யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்’’.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணத்தைத் திருப்பித் தர மறுப்பது, அசல் சான்றிதழ்களைத் திருப்பித் தராமல் இருப்பது ஆகியவற்றைச் செய்யும் உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்தது.
அக்டோபர் 31ஆம் தேதி வரை கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தை 100 சதவீதம் திருப்பித் தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்திருந்தது. நவம்பர் 1 முதல் டிசம்பர் 31, 2022 வரை வெளியேறும் மாணவர்களுக்கு செயலாக்க கட்டணமாக 1000 ரூபாய்க்கு மேல் பிடித்தம் செய்யக்கூடாது என்று யுஜிசி தெரிவித்திருந்தது.
எனினும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இதைப் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள் உள்ளிட்டோர் இதுகுறித்து யுஜிசிக்குப் புகார் அளித்து வந்த நிலையில், மாணவர்களிடம் பெறப்பட்ட கட்டணத்தைத் திருப்பித் தர மறுப்பது, அசல் சான்றிதழ்களைத் திருப்பித் தராமல் இருப்பது ஆகியவற்றைச் செய்யும் உயர் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.